Last Updated:
நிமிஷா பிரியாவின் தூக்கு தண்டனையை குறைக்க மத்திய அரசு தலையிட உத்தரவிட கோரிய மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
ஏமன் நாட்டில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிமிஷாவின் தண்டனையை குறைப்பதற்கு மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரிய மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
கேரளா மாநிலம், பாலக்காட்டைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர், நர்சிங் படித்து முடித்துவிட்டு கடந்த 2008 ஆம் ஆண்டு ஏமனுக்கு வேலைக்கு சென்றார். 2011-ம் ஆண்டு டோமி தாமஸ் என்பவருடன் திருமணம் நடைபெற்று, ஒரு குழந்தை பிறந்ததும் குடும்பத்துடன் ஏமனில் செட்டில் ஆகியுள்ளார்.
நாளடைவில் போதிய வருவாய் இல்லாததால், ஏமன் நாட்டைச் சேர்ந்த தலோல் அப்டோ மஹ்தி என்பவருடன் சேர்ந்து சொந்தமாக கிளினிக் ஆரம்பித்தார். 2015 ஆம் ஆண்டு கிளினிக் தொடங்கிய பின், கேரளா வந்த நிமிஷா பிரியாவுடன் மஹ்தியும் உடன் வந்துள்ளார்.
இதையடுத்து தனியாக ஏமன் சென்ற செவிலி நிமிஷா பிரியாவிடம் இருந்து, முழுமையாக கிளினிக்கை அபகரிக்க மஹ்தி முற்பட்டுள்ளார். அதற்கு நிமிஷா பிரியா மறுப்பு தெரிவித்ததும், அவரை துன்புறுத்தியதாக புகார் அளிக்கப்பட்டது. கேரளா வந்தபோது நிமிஷா பிரியாவுடன் எடுத்த போட்டோவை காட்டி, அவர் தனது மனைவி என்று கூறி ஏமன் அதிகாரிகளை மஹ்தி நம்ப வைத்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து பாஸ்போர்ட்டை தராமல் மிரட்டிய மஹ்திக்கு, மயக்க ஊசி செலுத்தி அதை மீட்க கேரள செவிலி திட்டமிட்டுள்ளார். மயக்க மருந்து அதிக அளவில் உடலில் செலுத்தப்பட்டதால் மஹ்தி உயிரிழந்ததாக கூறப்பட்டது. கேரளாவை சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா என்பவர், ஏமன் நாட்டை சேர்ந்தவரை கொலை செய்த வழக்கில் சிறையில் உள்ளார். அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், வரும் 16ம் தேதி அவரது தண்டனை நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக மத்திய அரசு தலையிட்டு தூக்கு தண்டனையை நிறுத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என நிமிஷாவின் குடும்பத்தார் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கவும் மனுதாரர்கள் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற உச்சநீதிமன்றம், இந்த மனு மீதான விசாரணை வரும் திங்களன்று பட்டியலிடப்படும் என அறிவித்துள்ளது. மேலும் இந்த மனு தொடர்பாக அட்டர்னி ஜெனரல் அலுவலகம் பதில் அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
July 10, 2025 1:12 PM IST
நிமிஷா பிரியாவின் தூக்கு தண்டனையை குறைக்க மத்திய அரசு தலையிட உச்சநீதிமன்றம் ஒப்புதல்!