News By Kavinmalar
ஜாவி,
மாரடைப்பு சம்பவங்களில் உயிர்கள் காப்பாற்றப்படுவதில் சிபிஆர் (CPR), தானியங்கி வெளிப்புற டிஃபிபிரிலேட்டர் (AED), மற்றும் தொடக்கக்கட்ட பரிசோதனைகள் மூன்றும் முக்கிய ஆயுதங்களாக விளங்குகின்றன என்று மேலவை உறுப்பினர் டாக்டர் ஆர்.ஏ. லிங்கேஸ்வரன் வலியுறுத்தினார். பினாங்கு மாநிலத்தில் தற்போது 273 AED கருவிகள் பொது இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. இது மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களின் உயிர்வாழ்வை மேம்படுத்துவதற்கான முக்கியமான முயற்சி என்றாலும், பொதுமக்களுக்கு CPR பற்றிய அடிப்படை அறிவு இல்லாமல் இந்த முயற்சி பயனளிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜனவரி முதல் மே 2025 வரையிலான காலப்பகுதியில், பினாங்கில் மருத்துவமனைக்கு வெளியே 700-க்கும் அதிகமான மாரடைப்பு (OHCA) சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவை பெரும்பாலும் திடீரெனவும், மருத்துவ வசதிகள் இல்லாத இடங்களில் நிகழ்ந்ததனால், பொதுமக்களின் உடனடி நடவடிக்கை உயிர்கள் காப்பாற்றப்படுவதில் முக்கிய பங்காற்றியதாக அவர் கூறினார். மலேசிய இந்து சங்கம் சுங்கை பாக்காப் வட்டாரப் பேரவை, பினாங்கு சிபிஆர் சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில் அவர் பேசினார்.
சிபிஆர் அறிவது ஒவ்வொருவருக்கும் அவசியம் என்பதை எடுத்துரைத்த அவர், “பாதிக்கப்படுபவர்கள் நமது பெற்றோர், மனைவி, குழந்தை அல்லது உறவினர்கள் எனக் கற்பனை செய்து பாருங்கள். CPR அறிவது ஓர் உயிரைக் காக்கும் எளிய செயல்,” என்றார். மேலும், AED கருவியின் இருப்பிடத்தையும் பயன்படுத்தும் முறையையும் தெரிந்துகொள்வது அவசியம் என வலியுறுத்தினார்.
PeKa B40, SOCSO போன்ற நிறுவனங்கள் வழங்கும் இலவச தொடக்கக்கட்ட பரிசோதனைகள் குறித்தும் விழிப்புணர்வு தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டார். தற்போது PeKa B40 திட்டத்தில் பினாங்கில் தகுதியுள்ளவர்களில் வெறும் 18.65% பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர். அவர்களில் 41% தொற்றாத நோய்கள் (NCD) – நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு – ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
SOCSO தரவின்படி பரிசோதனையில் ஈடுபட்ட தொழிலாளர்களில் 60% பேர் உடல் பருமனாலும், அதே அளவினர் அதிக கொழுப்பாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 19% தொழிலாளர்களுக்கு நீரிழிவு, மற்றொரு 19% பேர் உயர் இரத்த அழுத்தம், 3% பேர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுக்கு 40,000-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் SOCSO-வுக்கு விண்ணப்பிப்பதாகவும், அதில் சுமார் 50% தொற்றாத நோய்களால் ஏற்பட்டவையாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“இளம் தொழிலாளர்களிடையே இந்த நோய்கள் வேகமாக பரவி வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் 30 வயதுக்குள் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 100% அதிகரித்துள்ளது. உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வரை காத்திருக்க வேண்டாம்,” என்றார் லிங்கேஸ்வரன். நிகழ்வில் மாநில இந்து சங்கத் தலைவர் தர்மன் ஆனந்தன் தலைமையுரை வழங்க, வரவேற்புரை வட்டாரப் பேரவைத் தலைவர் அருணன் மாரிமுத்து வழங்கினார். 121 பேர் பயிற்சியில் பங்கேற்று சான்றிதழ் பெற்றனர். சிபிஆர் சங்கத் தலைவர் டாக்டர் சின் ஹின் லூன் தலைமையில் திருமதி அஞ்சலைதேவி பட்டறையை நடத்த, ஒருங்கிணைப்பாளராக திருமதி மு.கவிதா செயல்பட்டார்.