பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடன் தொடர்பில் இருந்தவர்களை மத்திய அரசு கண்காணித்து அதிரடியாக கைது செய்து வந்தது. அந்த வகையில், இந்திய ராணுவ ரகசியங்களையும், முக்கிய தகவல்களையும், பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக, பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் ஹரியானாவைச் சேர்ந்த 33 வயதான யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவும் ஒருவராவார். பாகிஸ்தானின் லாகூர் வீதிகளில், துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களின் பாதுகாப்புடன் ஜோதி மல்ஹோத்ரா ஒரு விஐபி போல் மார்க்கெட் பகுதியில் உலா வந்த வீடியோ, அவருக்கு பாகிஸ்தான் உளவு அமைப்புடன் இருந்த தொடர்பை அம்பலப்படுத்தியது. மேலும், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்பு அவர் பாகிஸ்தான் சென்றதும் தெரியவந்தது.
இந்நிலையில், ஜோதிமல்ஹோத்ரா பற்றிய புதிய தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. அதாவது கேரள சுற்றுலாத் துறை, இவரை, கேரளத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்கள் குறித்து சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்த பணியமர்த்தி இருந்ததாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது.
மாத்ருபூமி பத்திரிகை சார்பில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மாநில அரசு அளித்த பதில் மூலம், இந்த உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதன்படி, கேரள சுற்றுலாத்துறையை விளம்பரப்படுத்தும் நோக்கில் 41 சமூக ஊடக பிரபலங்களுக்கு கேரள சுற்றுலாத்துறை அழைப்பு விடுத்திருந்தது. அவர்களின் பயணம், தங்குமிடம், உணவு ஆகியவற்றுக்கான செலவை கேரள சுற்றுலாத்துறையே ஏற்றுக்கொண்டுள்ளது.
அவ்வாறு வந்தவர்கள் கேரளாவின் முக்கிய சுற்றுலாத்தலங்களுக்குச் சென்று வீடியோக்களை எடுத்து தங்களது சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். அவ்வாறு வந்தவர்களில் ஜோதி மல்ஹோத்ராவும் ஒருவர் என தெரியவந்துள்ளது. கேரளா அழைத்து வரப்பட்ட ஜோதி, பல்வேறு இடங்களுக்குச் சென்று வீடியோ எடுத்த அதனை அவரது தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது போக்குவரத்து, தங்குமிடம் என அனைத்துச் செலவுகளையும் கேரள அரசே செய்திருக்கிறது. இந்த செய்தி கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் முகமது ரியாஸை அம்மாநில பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. பினராயி விஜயன் அரசும் அவரது மருமகனான சுற்றுலாத்துறை அமைச்சரும் பாகிஸ்தான் உளவாளிக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றிருக்கின்றனர்.
சுற்றுலா அமைச்சர் உடனடியாகப் பதவி விலக வேண்டும். இந்த சம்பவம் நமது தேசிய பாதுகாப்புக்கு மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியிருக்கிறது என பாஜக செய்தித்தொடர்பாளர் ஷெஷாத் பூனவல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள கேரள சுற்றுாலத்துறை அமைச்சர் முகம்மது ரியாஸ், “கேரள சுற்றுலாத்துறையை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கை அது. அனைத்தும் வெளிப்படையாகவும் நல்ல நோக்கத்துடனும் செய்யப்பட்டன.
அரசு அமைப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை ஊடகங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நடந்த நிகழ்வு முழுக்க முழுக்க கேரள சுற்றுலாத்துறையின் பிரச்சாரத்துக்கானது. உளவாளி என்று தெரிந்தே அரசு ஒருவரை அழைக்காது.” என தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் கேரளாவில் பெரும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஆளும் பினராயி விஜயன் அரசுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
July 07, 2025 7:45 PM IST
பாகிஸ்தான் உளவாளி யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கேரளாவுக்கு வந்தது ஏன்..? வெடித்த சர்ச்சை.. என்ன நடந்தது?