Last Updated:
Parliament Monsoon Session | நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெற உள்ளது.
ஜூலை 21 ஆம் தேதி கூடும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில், ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.
நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத் தொடர் வரும் 21 ஆம் தேதி தொடங்க உள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், வக்ஃபு சட்டத் திருத்த மசோதா உட்பட 16 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்பின் நாடாளுமன்ற இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை வரும் 21 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நடத்துவதற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு ஆகஸ்டு 13 மற்றும் 14 ஆகிய இரண்டு நாட்களில் நாடாளுமன்றத்தில் எந்த அமர்வும் இருக்காது என்று குறிப்பிட்டுள்ளார்.
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது ’ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இது பற்றி விவாதிக்கவும், விளக்கம் அளிக்கவும் உடனடியாக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில், வரும் 21 ஆம் தேதி காலை 11 மணிக்கு நாடாளுமன்றம் கூட உள்ள நிலையில் இந்த தொடரில் விவாதங்கள் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Delhi,Delhi,Delhi
July 03, 2025 9:28 AM IST