சென்னை: “அழுத்தமான சூழ்நிலையையும் கவிதையாய் மாற்றும் தனித்துவமிக்கவர்” என்று கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “அழுத்தமான சூழ்நிலையையும் தனது ஒவ்வொரு நகர்வின் மூலம் கவிதையாய் மாற்றிய கிரிக்கெட்டின் தனித்துவமிக்க அரிய வீரர் மகேந்திர சிங் தோனிக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
பெருமை பிறப்பிலேயே வருவதல்ல, எடுக்கும் ஒவ்வொரு முடிவினாலும், ஒவ்வொரு ஓட்டத்தினாலும், அமைதியாக ஈட்டுகின்ற ஒவ்வொரு வெற்றியாலும் கட்டமைக்கப்படுவது அது என நீங்கள் காட்டியிருக்கிறீர்கள்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தோனியை அறிவோம்: தோனி, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிறந்தவர் (1981). பள்ளிக்கூட நாட்களில் பாட்மின்டன் மற்றும் கால்பந்து ஆட்டங்களில் சிறந்து விளங்கினார். இவரது பயிற்சியாளர் இவரை உள்ளூர் கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பராக களம் இறக்கினார்.
முதன்முதலாக பிஹாரில் 19 வயதுக்குட்பட்ட பிரிவில் 1998-ல் விளை யாடினார். அடுத்தடுத்து ரஞ்சி டிராஃபி, தியோடர் டிராஃபி, துலீப் டிராஃபி ஆடியதோடு கென்யா சென்ற இந்திய கிரிக்கெட் அணியின் ஏ பிரிவு ஆட்டங்களிலும் வெளுத்து வாங்கினார். 2004-ல் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன், துணைக் கேப்டன், மிகவும் வெற்றிகரமான கேப்டன் என உயர்ந்தார். முதன்முதலாக 2007-ல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கும் 2008-ல் டெஸ்ட் போட்டிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
ஒரு விக்கெட் கீப்பர் ஆட்டமிழக்காமல் 183 ரன்கள் எடுத்தது, ஒரு இன்னிங்சில் அதிக கேட்ச்கள் செய்தது, 50 ஆட்டங்களுக்கும் மேல் விளையாடிய இந்திய பேட்ஸ்மேன்களில் அதிகபட்ச சராசரி ரன் விகிதம், ஒருநாள் சர்வதேசப் போட்டியில் 7-வதாகக் களமிறங்கி அதிகபட்சமாக 139 ரன்கள் குவிப்பு… என அடுக்கடுக்கான சாதனைகளை நிகழ்த்தியவர்.
ஒரு இன்னிங்சில் 6 பேரை அவுட்டாக்கி அதிகபட்சமாக ஆட்டமிழக்கச் செய்த விக்கெட் கீப்பர், இதுவரை 250-க்கும் மேற்பட்ட கேட்ச்கள் மற்றும் நூற்றுக்கணக்கான ஸ்டம்ப் அவுட்கள் சாதனை, 6 முறை தொடர் நாயகன் விருது, 20-க் கும் மேற்பட்ட தடவை ஆட்டநாயகன் விருது, 324 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கேப்டனாக அதிக சிக்சர்கள் (204) அடித்தது என இவரது சாதனைப் பட்டியல் நீளமானது.
மொத்தம் 331 சர்வதேசப் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டவர்… 2007-ல் டி-20 உலகக்கோப்பை, 2011-ல் ஒருநாள் போட்டி உலகக் கோப்பை, டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் மற்றும் 2013 சாம்பியன்ஸ் கோப்பையில் பட்டம் என அத்தனை சாதனைகளையும் தனது கேப்டன்ஷிப்பில் பெற்ற ஒரே கேப்டன் என்ற தனிப் பெருமைக்குரியவர்.
மேலும், இவரது தலைமையிலான இந்திய அணி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் 2009-ல் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது. எதற்கும் பதற்றமோ கோபமோ கொள்ளாமல் அமைதியான மனோபாவம் கொண்டுள்ளதால், ‘கேப்டன் கூல்’ என கிரிக்கெட் உலகம் கொண்டாடுகிறது.
ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, பத்மஸ்ரீ விருது உள்ளிட்ட மேலும் பல விருதுகளையும் பெற்றவர். இவரது வாழ்க்கை வரலாறு, ‘எம்.எஸ். தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி’ என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்தது.
தன் மனைவியின் பெயரால் சாக்ஷி அறக்கட்டளையை உருவாக்கி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோருக்கும் ஆதரவற்ற குழந்தைகளுக்கும் ஏராளமான உதவிகளைச் செய்து வருகிறார்.
கிரிக்கெட்டிலும், தனிப்பட்ட வாழ்விலும் தனக்கென தனித்துவம் ஒன்றோடு விளங்கும் மகேந்திர சிங் தோனி, இன்று 44-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவருக்கு பல்துறை பிரபலங்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.