கோலாலம்பூர்,
ஜொகூர் மாநிலம் பொந்தியான் பகுதியில் உள்ள பள்ளி மண்டபம் ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 4) இரவு 11.30 மணியளவில் ஏற்பட்ட கலவரத்தில் ஈடுபட்ட 18 ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இத்தகவலை பொதுமக்கள் ஒருவர் பொந்தியான் போலீஸ் தலைமையகத்திற்கு தகவல் அளித்ததை அடுத்து, குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்றனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் உள்ளூர் குடிமக்களாகவும், வயது 17 முதல் 48 வரை உள்ளவர்களாவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்தக் கலவரம் தொடர்பாக குற்றவியல் சட்டத்தின் பிரிவு 148 (ஆயுதங்களுடன் கலவரம்) மற்றும் பிரிவு 427 (தீங்கு விளைவித்தல்) ஆகியவற்றின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது.
பிரிவு 148ன் கீழ் குற்றவாளிகள் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். பிரிவு 427ன் கீழ் 2 ஆண்டுகள் வரை சிறை அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.
சமூக வலைதளங்களில் இந்தக் கலவரத்துக்கான வீடியோக்கள் பரவிக்கொண்டிருப்பதை அடுத்து, பொதுமக்களிடையே பெரும் கவலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக அமைதிக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் குற்றங்களில் எந்தவிதமாகவும் தளர்வாக இருக்கமாட்டோம் என தெரிவித்துள்ளனர்.
மேலும், உறுதி செய்யப்படாத வீடியோக்கள் மற்றும் தகவல்களை பகிர வேண்டாம் எனவும் பொதுமக்களை போலீசார் கேட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவல்கள் உள்ளவர்கள், பொந்தியான் போலீஸ் hotline 07-6869999 என்ற எண்ணிற்கு தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.