Last Updated:
தெலங்கானாவில், அனைத்து வணிக நிறுவனங்களில் (கடைகள் தவிர) ஊழியர்கள் தினமும் 10 மணி நேரம் வரை வேலை செய்ய அனுமதிக்கப்படும்.
தெலங்கானாவில் அனைத்து வணிக நிறுவனங்களிலும் (கடைகள் தவிர்த்து), ஊழியர்கள் தினமும் 10 மணி நேரம் வரை வேலை செய்ய அனுமதிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து தெலங்கானா தொழிலாளர், வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்சாலைகள் துறையின் முதன்மைச் செயலாளர் அரசாணையை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “தெலங்கானா அனைத்து வணிக நிறுவனங்களிலும் (கடைகள் தவிர்த்து), ஊழியர்கள் தினமும் 10 மணி நேரம் வரை வேலை செய்ய அனுமதிக்கப்படும். இருப்பினும், வாரத்திற்கு மொத்த வேலை நேரம் 48 மணி நேரத்தை தாண்டக் கூடாது.
48 மணி நேரத்திற்கு மேலாக வேலை செய்யும் ஊழியர்களுக்கு, கட்டாயமாக கூடுதல் நேர ஊதியம் வழங்கப்பட வேண்டும். ஒரு ஊழியர் ஒரே நாளில் 6 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்தால், குறைந்தது 30 நிமிடம் ஓய்வு வழங்க வேண்டும்.
எந்த சூழ்நிலையிலும், கூடுதல் நேரம் உட்பட ஒரு நாளில் 12 மணி நேரத்தை தாண்டக் கூடாது. புதிய விதிகள் படி, ஒரு காலாண்டிற்கு (மூன்று மாதங்களுக்கு) கூடுதல் நேர வேலை 144 மணி நேரத்திற்குள் இருக்க வேண்டும். இந்த உத்தரவு வரும் ஜூலை 8 ஆம் தேதி அரசிதழில் வெளியான பிறகு அமலுக்கு வரும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஆந்திராவில் ஒரு நாளைக்கு 10 மணி நேர வேலை நேரம் என அரசு அறிவித்திருக்கிறது. இதற்கு முன்னதாக கடந்த 2023ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு வேலை நேரம் 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டது. இதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பவே, அதில் இருந்து அரசு பின்வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
July 06, 2025 5:40 PM IST