ரியோ டி ஜெனிரோ: பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடியை உலக நாடுகளின் தலைவர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். முன்னதாக, விமான நிலையத்தில் ஏராளமான இந்தியர்கள் திரண்டு மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரிக்ஸ் கூட்டமைப்பு 2009-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. பிரிக்ஸ் கூட்டமைப்பின் 2 நாள் உச்சி மாநாடு பிரேசிலின் ரியோ டிஜெனிரோ நகரில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக அங்கு சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, ரியோ டி ஜெனிரோ விமான நிலையத்தில் ஏராளமான இந்தியர்கள் திரண்டு, உற்சாக வரவேற்பு அளித்தனர்.
உச்சி மாநாட்டின் முதல் நாளான நேற்று ‘சர்வதேச அமைதி, பாதுகாப்பு, சீர்திருத்தம், நிர்வாகம்’ குறித்த சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்றார். பிரேசில் அதிபர் லூலா டா சில்வா மற்றும் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மோடியை ஆரத்தழுவி வரவேற்றனர். மாநாட்டின் 2-ம் நாளான இன்று சர்வதேச சுற்றுச்சூழல், சுகாதாரம் குறித்த சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது. இதிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார். பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக, சீன பிரதமர் லி கியாங் பங்கேற்றுள்ளார். ரஷ்ய அதிபர் புதின் காணொலி வாயிலாக கலந்து கொள்கிறார். மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி விரிவான பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
அமெரிக்காவின் வரி விதிப்பு: உலகின் பல்வேறு நாடுகள், குறிப்பாக பிரிக்ஸ் நாடுகள் மீது அமெரிக்க அரசு அதிக வரிகளை விதித்துள்ளது. இதுபற்றி பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. பிரிக்ஸ் கூட்டமைப்பு சார்பில் புதிய கரன்சியை அறிமுகம் செய்யவேண்டும் என்று கடந்த 2023-ல் பிரேசில் அதிபர் யோசனை தெரிவித்தார். இதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கண்டனம் தெரிவித்தார். ‘‘புதிய கரன்சியை அறிமுகம் செய்தால், பிரிக்ஸ் நாடுகள் மீது 100 சதவீதம் வரி விதிப்பேன்’’ என்று எச்சரித்தார். இந்த விவகாரம் குறித்தும் பிரிக்ஸ் மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
பிரிக்ஸ் மாநாட்டை முடித்துக்கொண்டு, பிரேசில் தலைநகர் பிரேசிலியாவுக்கு பிரதமர் மோடி செல்கிறார். அங்கு அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவை சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
ஆகாஷ் ஏவுகணைகள்: பிரேசிலின் பாதுகாப்புக்காக குறுகிய தூரம் பாயும் ஏவுகணைகளை வாங்க அந்த நாடு முடிவு செய்துள்ளது. இதற்காக பிரேசில் ராணுவ அதிகாரிகள் கடந்த 2023-ல் சீனா, இந்தியாவில் முகாமிட்டு பல்வேறு ஏவுகணைகளை ஆய்வு செய்தனர். வேறு சில நாடுகளின் ஏவுகணைகளையும் பிரேசில் ஆய்வு செய்தது. இறுதியில், இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணைகளை வாங்க பிரேசில் முடிவு செய்தது. அதற்கான ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகும் என்று தெரிகிறது.
பிரான்ஸின் ஸ்கார்பீன் ரக நீர் மூழ்கி கப்பல்களை இந்திய, பிரேசில்கடற்படைகள் பயன்படுத்தி வருகின்றன. பிரேசிலிடம் உள்ள இந்த வகை நீர்மூழ்கி கப்பல்களை பராமரிப்பது தொடர்பாகவும் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து இந்தியாவுக்கான பிரேசில் தூதர் கென்னத் பெலிக்ஸ் கூறியபோது, ‘‘டெல்லியில் கடந்த 2023-ல் ஜி-20 உச்சி மாநாடு நடந்தபோது, பிரதமர் மோடியும், பிரேசில் அதிபர் லூலா டா சில்வாவும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்படி இரு நாட்டு வர்த்தக உறவு வலுவடைந்து வருகிறது. தற்போது, பாதுகாப்பு, வர்த்தகம் தொடர்பாக பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்’’ என்றார்.