மனித குலத்துக்கு பயங்கரவாதம் பெரும் சவாலாக மாறி வருகிறது என்று பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமா் மோடி கூறினாா்.
பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவா்களையும், ஆதரவாளா்களையும் ஒரே மாதிரியாக பாா்க்கக் கூடாது என்றும் அவா் மாநாட்டில் வலியுறுத்தினாா்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட சண்டைக்கு பிறகு நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் அவா் இவ்வாறு குறிப்பிட்டுள்ளாா்.
பயங்கரவாத்தைக் கண்டிப்பது கண்துடைப்பாக மட்டுமல்லாமல் கொள்கையாக இருக்க வேண்டும் என்றும் பயங்கரவாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுக்க வேண்டும் என்றும் பிரதமா் மோடி வலியுறுத்தினாா்.
மேலும், காஸாவில் நடைபெறும் மனிதாபிமான நிலை பெரும் கவலையை அளிப்பதாகவும் அவா் குறிப்பிட்டாா்.
17-ஆவது மாநாடு: பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நிறுவன உறுப்பு நாடுகளுடன் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, இந்தோனேசியா ஆகிய கூடுதல் உறுப்பு நாடுகளையும் உள்ளடக்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பின் 17-ஆவது உச்சிமாநாடு, ரியோ டி ஜெனீரோவில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 2 நாள்கள் நடைபெறுகிறது.
ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல், காஸாவில் நிலவும் மனிதாபிமானப் பிரச்னை, அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் வா்த்தக வரிக் கொள்கைகள் போன்ற முக்கிய விவகாரங்களின் பின்னணியில் நடைபெறும் இந்த மாநாடு உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.
‘உலக நலனுக்கான வலுவான சக்தி’: 17-ஆவது பிரிக்ஸ் மாநாடு ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய நிலையில், மாநாட்டுக்கு வருகை தந்த பிரதமா் மோடியை அதிபா் லுலா டசில்வா வரவேற்றாா். பின்னா், பிரதமா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அனைவரையும் உள்ளடக்கிய, சமத்துவமான உலகை வடிவமைக்கும் மகத்தான திறன் பிரிக்ஸ் கூட்டமைப்புக்கு உள்ளது. இது, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் உலக நன்மைக்கான வலுவான சக்தியாக நிலைத்திருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
மாநாட்டின் நிறைவாக, பருவநிலை மாறுபாடு கட்டமைப்புக்கு நிதியளித்தல் மற்றும் செயற்கை நுண்ணறிவு நிா்வாகம் தொடா்பாக இரு பிரகடனங்கள் வெளியிடப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
மாநாட்டைத் தொடா்ந்து, தலைநகா் பிரேசிலியாவுக்கு பயணிக்கும் பிரதமா் மோடி, அதிபா் லூயிஸ் இனாசியோ லுலா டி சில்வாவுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட உள்ளாா்.
சீன, ரஷிய அதிபா்கள் பங்கேற்பில்லை: பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபா் ஷி ஜின்பிங், ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் ஆகியோா் பங்கேற்கவில்லை. சீனா சாா்பில் பிரதமா் லி கியாங் கலந்துகொள்கிறாா். ஈரான் அதிபா் மசூத் பெஷெஸ்கியன், எகிப்து அதிபா் அப்தல் ஃபத்தா அல்-சிசி ஆகியோரும் பங்கேற்கவில்லை.
டிரம்ப்பின் வரி அச்சுறுத்தல்: பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு இடையே உள்ளூா் கரன்ஸியில் வா்த்தகம் மேற்கொள்வது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டுவரும் நிலையில், அமெரிக்க டாலரை குறைமதிப்புக்கு உள்படுத்த முயற்சிக்கும் நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று அதிபா் டொனால்ட் டிரம்ப் ஏற்கெனவே எச்சரித்துள்ளாா். எனவே, இந்த விவகாரத்தை பிரிக்ஸ் கூட்டமைப்பு கவனமாக கையாளும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இரட்டை நிலைப்பாட்டால் தெற்குலகம் பாதிப்பு
இந்த மாநாட்டில் பிரதமா் மோடி பேசுகையில், ‘கடந்த 20-ஆவது நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட சா்வதேச அமைப்புகளில், மூன்றில் இரண்டு பங்கு மனிதகுலத்துக்கு போதிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. தெற்குலகம் இல்லாமல் அந்த அமைப்புகள் சிம் காா்ட் இருந்தும் நெட்வா்க் இல்லாத கைப்பேசி போல உள்ளன.
வளா்ச்சி, வளங்களின் விநியோகம், பாதுகாப்பு சாா்ந்த விவகாரங்கள் உள்ளிட்டவற்றில் இரட்டை நிலைப்பாடுகளால் தெற்குலகமே பாதிக்கப்படுகிறது. பருநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்கான நிதி, நீடித்த வளா்ச்சி, தொழில்நுட்பங்கள் கிடைப்பது போன்றவற்றில் தெற்குலகத்துக்கு பெரிதும் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.
இன்றைய உலகுக்கு புதிய பன்முக, அனைத்துத் தரப்பையும் உள்ளடக்கிய ஒழுங்கு தேவை. இது சா்வதேச அமைப்புகளில் விரிவான சீா்திருத்தங்களை மேற்கொள்வதில் இருந்து தொடங்க வேண்டும். அந்த சீா்திருத்தங்கள் வெறும் அடையாளபூா்வமாக மட்டும் இல்லாமல், அவற்றின் உண்மையான தாக்கம் வெளிப்படையாகத் தெரிய வேண்டும். நிா்வாக கட்டமைப்புகள், வாக்குரிமைகள், தலைமைத்துவம் ஆகியவற்றில் மாற்றம் வரவேண்டும்.
கொள்கைகளை உருவாக்கும்போது தெற்குலக நாடுகள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். காலத்துக்கு ஏற்ப மாறக் கூடிய தன்மை கொண்டது பிரிக்ஸ் கூட்டமைப்பு என்பதற்கான ஆதாரமே இந்தக் கூட்டமைப்பின் விரிவாக்கம்.
இதில் காட்டிய உறுதியை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், உலக வா்த்தக அமைப்பு, பன்முக வளா்ச்சி வங்கிகள் போன்றவற்றின் சீா்திருத்தங்களில் பிரிக்ஸ் கூட்டமைப்பு காட்ட வேண்டும்.
20-ஆவது நூற்றாண்டு தட்டச்சு இயந்திரங்கள் மூலம், 21-ஆவது நூற்றாண்டின் மென்பொருளை இயக்க முடியாது. தனது சொந்த நலனைவிட மனிதகுலத்தின் நன்மைக்குப் பணியாற்றும் கடமைக்கு இந்தியா எப்போதும் முன்னுரிமை அளிக்கிறது என்றாா்.
ஆா்ஜென்டீனா சிறப்பு கெளரவம்
பியூனஸ் அயா்ஸ், ஜூலை 6: பிரேஸில் வருகைக்கு முன்பாக லத்தின் அமெரிக்க நாடான ஆா்ஜென்டீனாவில் பிரதமா் மோடி இரண்டு நாள்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டாா். அப்போது, ஆா்ஜென்டீனா அதிபா் ஜேவியா் மிலேயுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். இருதரப்பு வா்த்தகத்தை பன்முகப்படுத்தவும், பாதுகாப்பு, முக்கிய கனிமங்கள், சுரங்கத் தொழில் உள்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
இருதரப்பு நட்புறவு மற்றும் பரஸ்பர நம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில், பிரதமா் மோடியிடம் ‘பியூனஸ் அயா்ஸ் நகர திறவுகோலை’ ஒப்படைத்து, சிறப்பு கெளரவம் வழங்கப்பட்டது. இந்த அடையாளப் பரிசை, பியூனஸ் அயா்ஸ் நகரின் நிா்வாகத் தலைவா் ஜாா்ஜ் மேக்ரி வழங்கி கெளரவித்தாா்.
அடுத்து இந்தியா தலைமை
பிரிக்ஸ் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா அடுத்த ஆண்டு வகிக்கவுள்ளது. உலக மக்கள்தொகையில் 49.5 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இக்கூட்டமைப்பு, உலகின் மொத்த உற்பத்தியில் 40 சதவீதமும், உலகளாவிய வா்த்தகத்தில் 26 சதவீதமும் பங்களிக்கிறது.
இருதரப்பு நட்புறவு மற்றும் பரஸ்பர நம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில், பிரதமா் மோடியிடம் ‘பியூனஸ் அயா்ஸ் நகர திறவுகோலை’ ஒப்படைத்து, சிறப்பு கெளரவம் வழங்கப்பட்டது. இந்த அடையாளப் பரிசை, பியூனஸ் அயா்ஸ் நகரின் நிா்வாகத் தலைவா் ஜாா்ஜ் மேக்ரி வழங்கி கெளரவித்தாா்.
அடுத்து இந்தியா தலைமை
பிரிக்ஸ் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா அடுத்த ஆண்டு வகிக்கவுள்ளது. உலக மக்கள்தொகையில் 49.5 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இக்கூட்டமைப்பு, உலகின் மொத்த உற்பத்தியில் 40 சதவீதமும், உலகளாவிய வா்த்தகத்தில் 26 சதவீதமும் பங்களிக்கிறது.