பெட்டாலிங் ஜெயா:
தீவிரவாதம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்பட்ட பங்ளாதேசத்தவர் மூவரை வெள்ளிக்கிழமையன்று (ஜூலை 4) மலேசியா பங்ளாதேசுக்கு நாடுகடத்தியது.
அம்மூவரும் பங்ளாதேஷை அடைந்ததும் அந்நாட்டின் பயங்கரவாத தடுப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டனர்.
அதே நாளன்று அந்த மூவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அவர்களைச் சிறையில் அடைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தத் தகவலை பங்ளாதேஷ் ஊடகம் வெளியிட்டது.
அந்த மூவருக்கும் எதிராக வழக்குகள் பதிவாகி வருவதாக பங்ளாதேஷின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் தலைவர் அக்காஸ் உத்தீன் புய்யான் கூறினார்.
தடுத்து வைக்கப்பட்ட அந்த மூவரைப் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய தீவிரவாதப் போராளி அமைப்புடன் தொடர்புடைய 36 பேரைக் கடந்த மே மாதத்துக்கும் ஜூன் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் மலேசிய அதிகாரிகள் கைது செய்தனர்.
பிடிபட்டவர்களில் இந்த மூவரும் அடங்குவர்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள 36 பேரில் 15 பேரை நாடுகடத்துவதற்கான ஆவணங்கள் தயாராகிவிட்டதாக மலேசிய உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 16 பேரிடம் விசாரணை நடத்தப்படுவதாக அவர் கூறினார்.
ஐவர் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் சிலாங்கூரின் ஷா அலாம் நகரிலும் ஜோகூரிலும் அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டதாகவும் அமைச்சர் சைஃபுதீன் தெரிவித்தார்.
பிடிபட்ட 36 பேரும் 100லிருந்து 150 பேரைக் கொண்ட தீவிரவாதப் போராளி அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று மலேசியக் காவல்துறையின் தலைமை ஆய்வாளர் காலித் இஸ்மாயில் தெரிவித்தார்.
அவர்கள் அனைவரும் பங்ளாதேஷிய ஊழியர்கள். மலேசியாவெங்கும் உள்ள ஆலைகள், கட்டுமானத் தளங்கள், பெட்ரோல் நிலையங்களில் அவர்கள் பணிபுரிந்தவர்கள்.
இந்த விவகாரம் குறித்து மலேசியாவில் உள்ள தனது தூதரகத்தைச் சேர்ந்த அதிகாரிகள், மலேசிய அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதாகப் பங்ளாதேஷ் அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 6) தெரிவித்தது