Last Updated:
பிரிட்டன் எஃப் 35 போர் விமானம் திருவனந்தபுரத்தில் தொழில்நுட்பப் பிரச்சினையால் தரையிறக்கப்பட்டது.
திருவனந்தபுரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பிரிட்டன் போர் விமானத்தை பழுதுபார்ப்பதற்காக அந்நாட்டின் நிபுணர் குழு வந்துள்ளது.
பிரிட்டன் கப்பற்படைக்கு சொந்தமான எஃப் 35 போர் விமானம், தொழில்நுட்பப் பிரச்சினை காரணமாக கடந்த ஜூன் 14ஆம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த விமானம் இங்கிலாந்தின் விமானம் தாங்கி கப்பலான HMS பிரின்ஸ் ஆஃப் வேல்ஸின் ஒரு பகுதியாகும். இது தற்போது இந்திய கடற்படையுடன் கூட்டுப் பயிற்சிகளுக்காக இந்தோ-பசிபிக் பகுதியில் உள்ளது. இந்திய கடற்கரையிலிருந்து சுமார் 100 கடல் மைல் தொலைவில் இருந்த கேரியரில் இருந்து போர் விமானம் புறப்பட்டது.
இருப்பினும், மோசமான வானிலை காரணமாக, அது கப்பலுக்குத் திரும்ப முடியவில்லை. மேலும் அருகிலுள்ள விமான நிலையத்திற்கு திருப்பி விட வேண்டியிருந்தது. இந்திய விமானப்படை அதிகாரிகள் இதை கண்காணித்து வருகின்றனர். F-35B விமானம், மேக் 1.6 வரை மிக அதிக வேகத்தில் பறக்க முடியும். மேலும், இது ரேடார் மூலம் கண்டறிவது கடினமாக இருக்கும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது விமானிகளுக்கு போர்க்களத்தின் முழு காட்சியையும் வழங்கும் உயர் தொழில்நுட்ப சென்சார்களைக் கொண்டுள்ளன என்றும், உலகின் மிகவும் மேம்பட்ட போர் விமானங்களில் ஒன்று என்றும் சொல்லப்படுகிறது. இந்த ஒற்றை இருக்கை போர் விமானம் சுமார் 51 அடி நீளம் கொண்டது. கிட்டத்தட்ட 7,000 கிலோ எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டது என்று சொல்லப்படுகிறது. இதன் விலை 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.835 கோடி) ஆகும்.
இந்நிலையில், திருவனந்தபுரம் விமான நிலையத்திலேயே போர் விமானம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையில், ஏறத்தாழ 20 நாட்களுக்குப் பின்னர் பிரிட்டன் நிபுணர் குழு விமானத்தை பழுதுபார்க்க வந்துள்ளது. பிரிட்டன் விமானப் படைக்கு சொந்தமான Atlas ZM417 போர் விமானத்தில் 25 பேர் கொண்ட விமானப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு படை அதிகாரிகள் திருவனந்தபுரம் விரைந்தனர்.
July 06, 2025 3:37 PM IST