பர்மிங்காம்: இந்திய அணி உடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 5-ம் நாளான இன்று இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு இன்னும் 536 ரன்கள் தேவைப்படுகிறது. இந்நிலையில், இந்தப் போட்டி நடைபெறும் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் பகுதியில் நிலவும் வானிலை குறித்து பார்ப்போம்.
ஆண்டர்சன் சச்சின் டிராபி தொடரில் இரண்டாவது போட்டியாக நடைபெறும் இந்த ஆட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்துக்கு 608 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. நான்காம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்துள்ளது.
வானிலை நிலவரம்: இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு 5-ம் நாள் ஆட்டம் தொடங்குகிறது. இறுதி நாள் என்பதால் 90 ஓவர்களையும் முழுவதுமாக வீச வேண்டும் என நடுவர்கள் பணிக்க வாய்ப்புள்ளது. ஆட்டத்தின் முடிவை எட்ட ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியும் அதை விரும்பும்.
இந்நிலையில், இன்று (ஜூலை 6) நண்பகல் வரையில் எட்ஜ்பாஸ்டனில் மழை பொழிவுக்கு 50 சதவீதம் வரை வாய்ப்புள்ளதாக வானிலை தகவல்கள் கூறுகின்றன. மதியம் 1 மணிக்கு பிறகு மழை பொழிவு இருக்காது என தகவல். இதனால் இந்தியா – இங்கிலாந்து இடையிலான பர்மிங்காம் டெஸ்ட் போட்டியில் 5-ம் நாள் ஆட்டம் மதிய உணவு நேரம் வரை நடைபெறுவதில் இடையூறு ஏற்படலாம் என கருதப்படுகிறது.
அதன் பின்னர் ஆட்டம் தொடங்க வாய்ப்புள்ளது. மழை மேகங்கள் சூழ்ந்த ஆடுகள சூழல் இந்திய அணியின் பந்து வீச்சுக்கு ஒத்துழைப்பு தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபக்கம் கனமழை பொழிய வேண்டும் என்பது இங்கிலாந்தின் எதிர்பார்ப்பாக இருக்கும்.