பகாவ்,
பகடிவதை சித்திரவதையால் தங்களுடைய 21 வயது மகள் தவனேஸ்வரி மோகன் தங்கியிருந்த ஹாஸ்டலின் 6ஆவது மாடியிலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கும் தாயார் லலிதா அருளப்பன் (வயது 43), தந்தை மோகன் பெருமாள் (வயது 45) போலீஸ் தீர விசாரித்து நியாயம் கிடைக்க வழி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
தங்களின் மகள் கோலாலம்பூரில் உள்ள பிரபல தனியார் அனைத்துலகக் கல்லூரியில் போலீஸ் – குற்றப்புலன்விசாரணைத் துறையில் டிப்ளோமா கல்வி கற்று வந்தார். இவர் கடந்த ஜூலை 2ஆம் தேதி தங்கியிருந்த ஹாஸ்டலின் 6ஆவது மாடியிலிருந்து விழுந்து விட்டதாக ஹாஸ்டல் நிர்வாகம் தங்களுக்கு காலை 6.53 மணிக்கு தகவல் அளித்தது.
இருப்பினும் அதே நாளன்று மாலை 4.16 மணியளவில் தங்களின் மகள் இறந்து விட்டதை கோலாலம்பூர் பெரிய மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவர் உறுதி செய்தார். சவப்பரிசோதனை செய்யப்பட்டதில் உயரமான இடத்தில் இருந்து விழுந்ததால் ஏற்பட்ட கடுமையான காயங்களால் அவர் உயிரிழந்தார் என்று உடற்கூறு மருத்துவ நிபுணர் அவரது அறிக்கையில் தெரிவித்துள்ளார் என்று பெற்றோர் தெரிவித்தனர்.
கோலாலம்பூர் மையப்பகுதியில் உள்ள ஓர் அனைத்துலகக் கல்லூரியில் தங்களின் மகள் படித்து வந்தார் என்று குறிப்பிட்ட அவர்கள், பண்டார் பாரு செந்தூலில் உள்ள பங்சாபுரி மாவார் செந்தூல் பெர்டானாவில் உள்ள கல்லூரி ஹாஸ்டலில் அவர் தங்கியிருந்தார். அவருடன் மேலும் 2 பிள்ளைகள் தங்கியிருந்தனர் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
கடந்த ஜூலை 1ஆம் தேதி இரவு 9 மணியளவில் தாமான் ஸ்ரீ முத்தியாரா, கம்போங் சீனா, பகாவ் என்ற முகவரியில் உள்ள தங்களது வீட்டிலிருந்து தவனேஸ்வரியுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது தன்னுடன் ஹாஸ்டலில் தங்கியிருக்கும் மாணவிகள் பேசுவதற்காக கூப்பிடுகிறார்கள், பிறகு பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார் என லலிதா கூறினார்.
ஜூலை 2ஆம் தேதி பின்னிரவு 1 மணியளவில் வீடியோ காலில் மகளோடு பேசினேன். உதடும் முகமும் வீங்கியிருந்தது. அதிர்ச்சியுடன் என்ன நடந்தது என்று கேட்டபோது உடன் தங்கியிருந்த ஒரு மாணவி நான் உன்னை அடித்தேனா என்று மிரட்டும் தோரணையில் பேசியதைக் கண்டு பதறிப்போனேன். அந்த மிரட்டலுக்குப் பிறகு மகள் மௌனமாக இருந்தார். அவரிடம் பயம் தெரிந்தது என்று லலிதா மேலும் சொன்னார்.
அதே நாளில் அதிகாலை 6.53 மணியளவில் ஹாஸ்டல் நிர்வாகத்திடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் 6ஆவது மாடியில் இருந்து மகள் விழுந்துவிட்டதாகத் தகவல் தெரிவித்தனர். அதிர்ச்சியில் குடும்பமே உறைந்துபோனோம். சில மணி நேரங்களுக்கு முன் பேசிய மகளுக்கு என்னநேர்ந்தது என்பது தெரியாமல் நாங்கள் கதறினோம்.
கோலாலம்பூர் பெரிய மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் மகள் நினைவு தவறி அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் உயரமான இடத்திலிருந்து விழுந்ததால் உடம்பில் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில் அவருக்கு மரணம் நிகழ்ந்தது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர் என்று தந்தை மோகன் பெருமாள் தெரிவித்தார்.
எங்கள் மகள் இப்போது உயிருடன் இல்லை. ஆனால் உண்மை வெளிவர வேண்டும். என்ன நடந்தது என்பதை போலீஸ் தீர விசாரிக்க வேண்டும். கல்லூரி நிர்வாகமும் எதையும் மூடி மறைக்காமல் உண்மையைச் சொல்ல வேண்டும். மகளின் அகால மரணத்திற்கு நீதி வேண்டும் என்று தாயும் தந்தையும் மன்றாடிக் கேட்டுக்கொண்டனர்.
தன்னுடைய மகள் மிகவும் சுறுசுறுப்பானவள், பட்டாம்பூச்சி போல் சுற்றித்
திரிபவள். போலீஸ் உடை அணிய வேண்டும் என்பது அவளது லட்சியமாக இருந்தது. ஆனால் பிள்ளையை நாங்கள் இழந்து பரிதவிக்கிறோம். அவளது கனவும் காற்றில் நெருப்பில் பொசுங்கிவிட்டது. உண்மையை வெளியில் கொண்டு வர ஒரு வழக்கறிஞரின் உதவியையும் நாடியிருக்கிறோம் என்று தாயார் லலிதாவும் தந்தை மோகனும் கூறினர்.