இந்தியாவில் பொருளாதாரக் குற்றவாளியான நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடியும் வேறொரு மோசடி வழக்கில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி தொடர்பாக தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி (41), அமெரிக்காவில் ஜூலை 4 ஆம் தேதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க அரசு தரப்பு புகாரின்படி, வைர வியாபாரத்தில் பண மோசடி மற்றும் அதனை மறைக்க முயன்றதற்கான குற்றவியல் வழக்குகளும் (ஆதாரங்களை அழித்தல்) நேஹல் மீது தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேஹல் மோடி 2.6 மில்லியன் டாலருக்கும் (சுமார் ரூ. 22.23 கோடி) அதிகமாக மோசடி செய்ததாக நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன்பெற்று திரும்பச் செலுத்தாமல் வைர வியாபாரி நீரவ் மோடியும், அவரின் உறவினா் மெஹுல் சோக்ஸியும் கடந்த 2018-ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து தப்பினா். இதில் நீரவ் மோடி பிரிட்டனிலும், மெஹுல் சோக்ஸி ஆன்டிகுவாவிலும் தஞ்சமடைந்தனா்.
இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் பொருளாதாரக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நீரவ் மோடி, லண்டனில் கடந்த 2019-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்தில் கைது செய்யப்பட்டு, அந்நாட்டிலேயே சிறைவைக்கப்பட்டுள்ளாா்.
மருத்துவ காரணங்களைச் சுட்டிக்காட்டி பிரிட்டன் நீதிமன்றங்களில் நீரவ் மோடி முன்னதாக தாக்கல் செய்த அனைத்து ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.