AP செய்திக்கு பதிலளிக்கும் விதமாக, GHF எக்ஸ் பக்கத்தில், ஒரு அறிக்கையை வெளியிட்டது, அதில்,“எங்கள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை. இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக உடனடி விசாரணையை தொடங்கியுள்ளோம். வீடியோவில் கேட்ட துப்பாக்கிச் சூடு GHF விநியோக தளத்திற்கு அருகில் இருந்த IDF (இஸ்ரேலிய இராணுவம், இஸ்ரேல் பாதுகாப்புப் படை) இலிருந்து வந்தது என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இது தனிநபர்களை நோக்கி இயக்கப்படவில்லை, மேலும் யாரும் சுடப்படவில்லை. எங்கள் மீதான குற்றச்சாட்டுக்கு சில வாரங்களுக்கு முன்பு தவறான நடத்தைக்காக பணிநீக்கம் செய்யப்பட்ட அதிருப்தியடைந்த முன்னாள் ஒப்பந்ததாரர்தான் முதன்மை ஆதாரம். அதனால் அவர்களின் அறிக்கை நம்பகத்தன்மையை இழக்கிறது.” எனக் குறிப்பிட்டிருக்கின்றனர்.
மாறுவேட படுகொலை
ஆக்ஸ்பாம் உள்பட 150-க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள் “GHF செயல்படத் தொடங்கியதிலிருந்து 500-க்கும் மேற்பட்ட அகதிகள் கொல்லப்பட்டுள்ளனர்” என அறிக்கைகள் வெளியிட்டதை அடுத்து, GHF மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்திருக்கிறது.
1999-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மருத்துவ உதவி நிறுவனமான டாக்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ், “GHF-ன் உதவி மையங்களை மனிதாபிமான உதவியாக மாறுவேடமிட்டு படுகொலை செய்து வருகிறது” எனத் தெரிவித்திருக்கிறது.