Last Updated:
India vs England | பர்மிங்காம் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து வீரர்கள் 6 பேர் டக் அவுட் ஆனதால் போட்டியில், மீண்டும் இந்தியாவின் கை சற்று ஓங்கியுள்ளது.
இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2ஆவது போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. கேப்டன் ஷுப்மன் கில்லின் அபார இரட்டை சதத்தால் 587 ரன்கள் குவித்து இந்திய அணி ஆல் அவுட் ஆனது. அதனைத் தொடர்ந்து களம் கண்ட இங்கிலாந்து அணி, இரண்டாம் நாள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில் நேற்று நடந்த 3ஆம் நாள் ஆட்டத்தில், 84 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. ஆனால் அதன் பின் ஜோடி சேர்ந்த ஹாரி ப்ரூக் மற்றும் ஜேமி ஸ்மித் நங்கூரம் போல நிலைத்து நின்று ஆடி 303 ரன்கள் சேர்த்ததால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. ப்ரூக் 158 ரன்களிலும் ஸ்மித் 184 ரன்களிலும் அவுட் ஆன நிலையில், பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர்.
இதனால் 407 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆல் அவுட் ஆன நிலையில், இந்திய தரப்பில் முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளும் ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இங்கிலாந்து அணி வீரர்களில் மொத்தம் 6 பேர் டக் அவுட் ஆன நிலையில் ஒரு இன்னிங்சில் அதிக பேர் டக் அவுட் ஆன மோசமான சாதனை என்ற பட்டியலில் இந்த இன்னிங்சும் இணைந்துள்ளது. இந்திய அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 6 விக்கெட்களையும், ஆகாஷ் தீப் 4 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
பின்னர் 2ஆவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி ஜெய்ஸ்வால் விக்கெட்டை இழந்த நிலையில் 64 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி இங்கிலாந்து அணியைவிட 244 ரன்கள் முன்னிலையில் உள்ள நிலையில், ராகுல் மற்றும் கருண் நாயர் களத்தில் உள்ளனர்.
July 05, 2025 7:29 AM IST