பர்மிங்காம்: இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 84 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்த நிலையில் ஜேமி ஸ்மித், ஹாரி புரூக் ஆகியோரது அபாரமான ஆட்டத்தால் 400 ரன்களை கடந்தது. 3ஆவது நாள் முடிவில் இந்திய அணி தற்போது 244 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷுப்மன் கில் 269 ரன்கள் விளாசினர். இதையடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்தது.
ஜோ ரூட் 18, ஹாரி புரூக் 30 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 3-வது நாள் ஆட்டத்தை இங்கிலாந்து அணி தொடர்ந்து விளையாடியது. ஜோ ரூட் 22 ரன்களிலும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ரன் ஏதும் எடுக்காமலும் முகமது சிராஜின் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்தனர். 84 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்த நிலையில் களமிறங்கிய ஜேமி ஸ்மித், ஹாரி புரூக்குடன் இணைந்து தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டு இந்திய பந்து வீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுத்தார்.
பிரசித் கிருஷ்ணா வீசிய 32-வது ஓவரில் ஜேமி ஸ்மித் 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் விளாசி மிரட்டினார். மட்டையை சுழற்றிய ஜேமி ஸ்மித் 80 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் தனது 2-வது சதத்தை விளாசினார். இதன் மூலம் மதிய உணவு இடைவேளைக்கு முன்னதாக ஒரே செஷனில் சதம் விளாசிய முதல் இங்கிலாந்து பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்தார் ஜேமி ஸ்மித். அவரது அதிரடியால் இங்கிலாந்து அணி மதிய உணவு இடைவேளையில் 47 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்தது. ஜேமி ஸ்மித் 102, ஹாரி புரூக் 91 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த செஷனில் இங்கிலாந்து அணி 27 ஓவர்களில் 172 ரன்களை வேட்டையாடி இருந்தது.
இந்திய அணி ஷார்ட் பால் வியூகத்தை கையாண்ட நிலையில் இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் அதை ரன் வேட்டையாக மாற்றி அதிர்ச்சி கொடுத்தனர். மதிய உணவு இடைவேளை நெருங்கிய நிலையில் சுழற்பந்து வீச்சை இந்திய அணி கையில் எடுத்தது. ஆனாலும் இங்கிலாந்து அணியின் ரன் வேட்டையை தடுக்க முடியவில்லை.
மதிய உணவு இடைவேளைக்கு பின்னர் ஆட்டம் தொடர்ந்த நிலையில் சீராக ரன்கள் சேர்த்த ஹாரி புரூக் 137 பந்துகளில், ஒரு சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் தனது 9-வது சதத்தை நிறைவு செய்தார். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய பந்து வீச்சாளர்கள் தடுமாறினர். தேனீர் இடைவேளையில் இங்கிலாந்து அணி 75 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 355 ரன்கள் குவித்திருந்ததது. 2-வது செஷனில் மட்டும் இங்கிலாந்து அணி 28 ஓவர்களில் 106 ரன்கள் சேர்த்தது. ஜேமி ஸ்மித் 157 ரன்களுடனும், ஹாரி புரூக் 140 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
தேனீர் இடைவேளைக்கு பின்னர் இருவரும் தொடர்ந்து விளையாடினார்கள். இந்த ஜோடியின் அபாரமான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 82.1-வது ஓவரில் 387 ரன்களை கடந்து பாலோ ஆனை தவிர்த்தது. சிறப்பாக விளையாடி வந்த ஹாரி புரூக் 234 பந்துகளில், ஒரு சிக்ஸர், 17 பவுண்டரிகளுடன் 158 ரன்கள் எடுத்த நிலையில் ஆகாஷ் தீப் பந்தில் போல்டானார். 6-வது விக்கெட்டுக்கு ஹாரி புரூக், ஜேமி ஸ்மித் 302 ரன்கள் குவித்தது.
இங்கிலாந்து அணியின் கடைசி மூன்று விக்கெட்டுகளை சிராஜ் கைப்பற்றினார். கார்ஸ், ஜாஸ் டங், ஷோயப் பஷீர் என மூவரையும் அவர் டக் அவுட் செய்தார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 407 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஜேமி ஸ்மித் 184 ரன்கள் உடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியின் 6 பேட்ஸ்மேன்கள் டக் அவுட் ஆகியிருந்தனர்.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 28 ரன்கள் எடுத்தார். அவருடைய விக்கெட்டை ஜோஷ் டங் வீழ்த்தினார். கே.எல்.ராகுல் 28 ரன்களுடனும் கருண் நாயர் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். மூன்றாவது நாள் முடிவில் 13 ஓவர்களில் இந்திய அணி 64 ரன்கள் எடுத்துள்ளது. இதன்படி தற்போது இந்திய அணி 244 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது. இன்னும் இரண்டு நாள் ஆட்டம் எஞ்சியுள்ளது குறிப்பிடத்தக்கது