பிகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக, அம்மாநில கட்சியான நிதிஷ்குமாரின் ஜனதா தல் ஆகிய கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்நிலையில், இன்று பிகார் காங்கிரஸ் அலுவலகத்தில் மாநிலத்தில் இருக்கும் ஐந்து லட்சம் பெண்களுக்கு இலவச நாப்கின் வழங்கும் திட்டத்தை இன்று அக்கட்சி அறிமுகம் செய்தது. இந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சியின் பிகார் மாநிலத் தலைவர் ராஜேஷ் குமார், காங்கிரஸ் கட்சியின் தேசிய பெண்கள் அணி தலைவர் அல்கா லம்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், இந்தியா கூட்டணி பிகாரில் ஆட்சிக்கு வந்ததும், ரூ. 2,500 உதவித் தொகை வழங்கும் எனத் தெரிவித்தார். மேலும், தற்போது, நாங்கள் இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்க திட்டமிட்டுள்ளோம் எனத் தெரிவித்து அந்த நாப்கின் டப்பாவை காட்சிப்படுத்தினார்.
இதனையடுத்து, ஜனதா தள் எம்.எல்.சி.யும், அக்கட்சியின் செய்தித் தொடர்பாளருமான நீரஜ் குமார், நாப்கின் பெட்டிகளில் ராகுல் காந்தியின் படம் இருந்ததற்கு தனது கடும் அதிருப்தியை தெரிவித்தார். இது குறித்து அவர், “எங்கள் தலைவர் நிதிஷ் குமார் ஏற்கனவே பெண்கள் முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறார். ஆனால், காங்கிரஸ் பெண்களின் கண்ணியத்தை அவமரியாதை செய்துவிட்டது” எனத் தெரிவித்தார்.
இதேபோல், பாஜகவின் செய்தி தொடர்பாளர் குண்டால் கிரிஷ்ணா, “பிகாரில் பெண்களுக்கு என்ன வேண்டுமோ, அதனை அரசு செய்துவருகிறது. ஆனால், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் தனது வெற்றி வாய்ப்புகளைப் பற்றி கவலைப்படும் காங்கிரஸின் அவல நிலையை இது காட்டுகிறது” எனத் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தை ஆளும் கட்சியும், அதன் கூட்டணியும் கடுமையாக விமர்சித்துவரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய பெண்கள் அணி தலைவர் அல்கா லம்பா, “பாஜக எப்போதும் பெண்களுக்கு எதிரான மனநிலையைக் கொண்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “நவீன யுகத்தில், ராகுல் காந்தியின் புகைப்படங்கள் ஏன் பாக்கெட்டுகளில் உள்ளன என்பது கேள்வி அல்ல. பீகாரில் உள்ள நமது மகள்கள் மாதவிடாய் சுழற்சியின் போது துணி துண்டுகளைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதும், நோய்வாய்ப்படுவதும் ஏன் என்பதுதான் கேள்வி. பாஜக எப்போதும் பெண்களுக்கு எதிரான மனநிலையைக் கொண்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
July 04, 2025 10:16 PM IST