Last Updated:
“நாங்கள் மராத்தியை மதிக்கிறோம், ஆனால் அதன் பெயரில் வன்முறை ஏற்றுக்கொள்ளப்படாது” என மகாராஷ்டிரா முதல்வர் ஃபட்னாவிஸ் கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா அமைப்பைச் சேர்ந்தவர்கள், கடைக்காரர் ஒருவர் மராத்தி மொழியில் பேசவில்லை என அவரை தாக்கியது தொடர்பாக பேசிய அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், வன்முறையில் ஈடுபடாமல் மராத்தியை மதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “நாங்கள் மராத்தியை மதிக்கிறோம், ஆனால் அதன் பெயரில் வன்முறை ஏற்றுக்கொள்ளப்படாது. வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவில் எந்த மொழியையும் அவமதிக்க அனுமதிக்க மாட்டோம்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். எதிர்காலத்தில் இதுபோன்ற மொழிப் பிரச்சினையை யாராவது உருவாக்கினால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எங்கள் மராத்தியைப் பற்றி நாங்கள் பெருமைப்படுகிறோம். ஆனால் இந்த வழியில் இந்தியாவின் எந்த மொழிக்கும் அநீதி இழைக்கப்பட முடியாது; இதை மனதில் கொள்ள வேண்டும். சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ஃபட்னாவிஸ் கூறினார்.
மும்பைக்கு அருகிலுள்ள மீரா சாலையில் ‘ஜோத்பூர் ஸ்வீர் ஷாப்’ நடத்தி வரும் பாபுலால் சவுத்ரி என்ற 48 வயது கடைக்காரர், மராத்தியில் பேசுவது ஏன் கட்டாயம் என்று கேட்டதற்காக ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா அமைப்பினரால் தாக்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து, இன்று அம்மாநில முதல்வர் இந்த விளக்கத்தை கொடுத்துள்ளார்.
July 04, 2025 8:30 PM IST