கோலாலம்பூர் :
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய ஊழியர்கள் உடற்பருமனை விடுத்து உடல் எடையைச் சீராக வைத்திருக்க வேண்டும்.
அவ்வாறு இல்லையெனில், அவர்கள் பதவி உயர்வுக்கு தகுதி பெற மாட்டார்கள் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அஸாம் பாக்கி கூறியுள்ளார் .
இது MACC ஊழியர்களிடையே சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நோக்கம் கொண்டது. என்றும், அவர்கள் தங்கள் உடலுறுதியை உச்சபட்ச நிலையில் வைத்துக்கொள்வதை உறுதி செய்யும் முயற்சியுமாகும் என்று அவர் விளக்கினார்.
“பல அரசு துறை ஊழியர்கள் உடற்பருமனுடன் இருக்கிறார்கள். ஒருவர் அதிக எடையுடன் இருந்தால், அது அவருடைய தோற்றம், உடலுறுதி, பொதுமக்களுக்கு ஆற்ற வேண்டிய சேவை ஆகியவற்றை பாதிக்கிறது.
“நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள், ஒருவர் அதிக உடற்பருமனுடன் இருந்தால், அவரால் தனது வேலையை சிறப்பாகச் செய்ய முடியாது. மேலும், அவருக்கு பலவித சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயமும் இருக்கும்,” என்று கிளந்தான் மாநில ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் இயக்குநராக இருந்த ரோஸ்லி ஹுசேனுக்குப் பதிலாக புதிய இயக்குநரான அறிமுகப்படுத்தும் செய்தியாளர் சந்திப்பில் அஸாம் பாக்கி இன்று (ஜூலை 4) தெரிவித்தார்.
இது குறித்த சுற்றறிக்கை ஒன்று அடுத்த வாரம் வெளியிடப்படும் என்றும், அனைத்து அதிகாரிகளும் தங்கள் உடல் எடையைச் சரிசெய்து கொள்ள அவர்களுக்கு ஆறுமாத அவகாசம் அளிக்கப்படும் என்றும் அஸாம் பாக்கி சொன்னார்.
“இது உடல் எடைப் பிரச்சினையை எதிர்கொண்டுள்ள அனைவருக்கும் பொருந்தும். அவர்கள், அடிப்படை மருத்துவக் காரணங்கள் இருந்தாலன்றி, தங்கள் உடல் எடையைக் குறைக்க வேண்டும். இது மிக முக்கியமானது. இதன் தொடர்பில், அரச மலேசிய காவல்துறை தனது ஊழியர்கள் பதவி உயர்வு பெற வேண்டுமானால் கச்சிதமான உடல் எடையைக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
“அதை நான் ஊழல் தடுப்பு ஆணையத்திலும் அமல் படுத்துவேன். நமது அதிகாரிகள் உடலுறுதியுடன் தங்கள் பணிகளை சிறப்பாகச் செய்வதை நான் உறுதி செய்ய விரும்புகிறேன்,” என்று அவர் தெளிவுபடுத்தினார்.