கோலாலம்பூர்,
தொழிலாளர் துறையில் இருந்து ஆட்களை சேர்த்து, IS சார்ந்த ஒரு பங்களாதேஷ் பயங்கரவாத இயக்கத்தில் உள்வாங்கப்பட்ட 36 வெளிநாட்டவர்களை காவல்துறையினர் கடந்த வாரம் கைது செய்துள்ளனர் என IGP டான் ஸ்ரீ காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.
தொழிற்சாலைகள், பெட்ரோல் நிலையங்கள் மற்றும் கட்டிடப்பணித் தளங்களில் பணியாற்றும் பங்களாதேஷ் மற்றும் பிற வெளிநாட்டு தொழிலாளர்களிடமிருந்து ஆட்களை இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் (Facebook, WhatsApp, Telegram) வழி சேர்த்ததாகவும், WhatsApp குழுவில் மட்டும் 150 முதல் 200 பேர் வரை இருந்ததாகவும் அவர் கூறினார்.
இணையம் வழியாக சேர்க்கப்பட்டவர்கள், அந்த இயக்கத்தின் புதிய கிளைகளை ஆரம்பிக்க தலைவர்களாக நியமிக்கப்பட்டு, அந்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அவர்களின் செல்வாக்கை பரப்பும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் சிரியா மற்றும் IS அமைப்புக்கு நிதி திரட்டியும், BCash, Touch ‘n Go மற்றும் சர்வதேச பணமாற்ற சேவைகள் மூலம் பணம் அனுப்பியதையும் காவல் துறை தெரிவித்தது.
இவ்வியக்கம் ஆண்டுக்கு ஒரு நபர் RM500 கட்டணமாக வசூலித்து, தனிப்பட்ட திறனுக்கேற்ப நிதி வழங்கச் சொல்லியிருந்தது என்றும், ஏற்கனவே ஐந்து பேர் பயங்கரவாத அமைப்புகளில் பங்கேற்றதற்கும், தீவிரவாத சிந்தனைகளை பரப்பியதற்கும் அவர்கள் குற்றம் சாட்டப்பட்டு குற்றவியல் சட்டத்தின் 6A பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஐஜிபி கூறினார்.
இதில் 15 பேர் குடிபெயர்வு துறைக்கு ஒப்படைக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டு உள்ளனர். மேலும் 16 பேர் தற்போது சுகா சட்டத்தின் (Security Offences [Special Measures] Act 2012) கீழ் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறார்கள்.