புதுடெல்லி: மாலி நாட்டில் பணியாற்றிய 3 இந்தியர்கள் கடத்தப்பட்டு உள்ளனர். அவர்களை பத்திரமாக மீட்க மாலி அரசிடம் மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் ராணுவ ஆட்சி நடைபெறுகிறது. அந்த நாட்டில் ராணுவத்துக்கும் அல்காய்தா ஆதரவு தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. மாலி நாட்டின் மத்திய, மேற்கு பகுதிகளில் உள்ள ராணுவ முகாம்களை குறிவைத்து அல்காய்தா ஆதரவு தீவிரவாதிகள் அண்மையில் தாக்குதல் நடத்தினர். அப்போது இருதரப்புக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்றது. இதில் 80 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ராணுவ தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது.
இந்த சூழலில் கடந்த 1-ம் தேதி மாலியின் கேய்ஸ் நகரில் உள்ள சிமென்ட் ஆலை மீது அல்காய்தா தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அங்கு பணியில் இருந்த தொழிலாளர்களை தீவிரவாதிகள் கடத்திச் சென்று உள்ளனர். இதில் 3 பேர் இந்தியர்கள்.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கேய்ஸ் நகரில் சிமென்ட் ஆலையில் பணியாற்றிய 3 இந்தியர்களை, அல்-காய்தா ஆதரவு ஜேஎன்ஐஎம் தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர். அவர்களை பத்திரமாக மீட்க மாலி அரசிடம் வலியுறுத்தி உள்ளோம். மாலியில் உள்ள இந்திய தூதரகம், அங்குள்ள நிலைமையை மிகவும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. மாலியில் தங்கியிருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மாலி நாட்டில் சுரங்கம், மின்சாரம், சிமென்ட், மருந்து உற்பத்தி ஆலைகளில் சுமார் 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். ராணுவம் மற்றும் தீவிரவாத அமைப்புகளுக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வரும் சூழலில் அவர்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகி உள்ளது.
தற்போது மாலியில் கடத்தப்பட்ட 3 இந்தியர்களின் விவரங்கள் வெளியிடப்படவில்லை. அவர்கள் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட சிமென்ட் ஆலை நிர்வாகம் சார்பில் தீவிரவாத குழுக்களுடன் திரைமறைவில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. கடத்தப்பட்ட 3 இந்தியர்களின் குடும்பத்தினருடன் மத்திய வெளியுறவுத்துறை தொடர்பில் இருக்கிறது. விரைவில் 3 பேரும் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என்று வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.