லக்னோ,உத்தர பிரதேசத்தின் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் நாக்தா தக் கிராமத்தில் வசித்து வருபவர் ராமு. இவருடைய மனைவி பிரஜ்பாலா. 5 மாத கர்ப்பிணி. இந்நிலையில், நேற்று மாலை ஆசை ஆசையாய் உணவு சமைத்து விட்டு கணவருக்காக காத்திருந்து உள்ளார். வேலை முடிந்து வீட்டுக்கு வந்த ராமு உணவை தட்டில் போட்டு சாப்பிட்டு உள்ளார்.
அப்போது, உணவில் உப்பு சரியாக இல்லை என கூறி மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். இதில், மாடியில் இருந்து உருண்டு விழுந்த பிரஜ்பாலா பலத்த காயமடைந்து உள்ளார். உடனடியாக அவரை மீட்டு குடும்பத்தினர் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.
இதன்பின்பு, அலிகார் மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று பலியானார். இந்த நிலையில், பிரஜ்பாலாவின் சகோதரர் திடுக்கிடும் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
அதில், ராமுவுக்கு அவருடைய உறவுக்கார பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்தது. பிரஜ்பாலா அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனாலேயே, தம்பதிகளுக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
சம்பவத்திற்கு பின் ராமு தப்பியோடினார். எனினும், அவரை இரவோடு இரவாக கிராமத்தினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதுபற்றி கூடுதல் போலீஸ் சூப்பிரெண்டு ராஜேஷ் பாரதி கூறும்போது, ராமுவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார்.