கிரேட்டர் நொய்டாவில் ஒரு கல்லூரிக்கு அருகிலுள்ள சாலையில், இரண்டு கார் உரிமையாளர்கள் ஆபத்தான முறையில் ஸ்டண்ட் செய்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, நொய்டா போக்குவரத்து காவல்துறை இருவருக்கும் மொத்தமாக ரூ.1.21 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
இந்த சம்பவம் நாலெட்ஜ் பார்க்கில் உள்ள கல்லூரி ஒன்றுக்கு அருகாமையில் உள்ள சாலையில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட மாருதி பிரெஸ்ஸா மற்றும் பலேனோ ஆகிய இரு வாகனங்களும் திகிலூட்டும் வகையில் அவசரமாக வாகனத்தை இயக்கியது, பாதுகாப்பில்லாத ஸ்டண்ட் முயற்சி மற்றும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதாகக் கூறி அபராதம் விதிக்கப்பட்டது.
வீடியோவின் படி, சாலையில் அடுத்தடுத்து செல்லும் மூன்று கார்களில், வேகமாக செல்லும் பிரெஸ்ஸா கார் ஒன்று, அதன் முன்புறம் செல்லும் மற்றொரு காருக்கு மிகவும் நெருக்கமாக சென்று முந்துவதை பார்க்க முடிகிறது. அதே நேரத்தில், ஒரு காரில் சில நபர்கள் காரின் ஜன்னல் வழியாக வெளியே வந்தபடி கையில் சில கம்புகளை காட்டியபடி பயணம் செய்கின்றனர். மறுபுறம், அங்குமிங்குமாக நிதானத்தை இழந்தது போல, ஒரு கார் ஸ்டண்ட் செய்கிறது.
ग्रेटर नोएडा: GL Bajaj कॉलेज के पास रील बनाने वाले लड़कों ने गाड़ियों से किया जानलेवा स्टंट।
पुलिस ने एक कार का ₹63,500 और दूसरी का ₹57,500 का चालान काटा। pic.twitter.com/5jTwukOPLW
— Greater Noida West (@GreaterNoidaW) June 30, 2025
இந்த வீடியோ பிரபலமான பாடல் இசையுடன் இன்ஸ்டாகிராம் ரீலாக பதிவேற்றப்பட்டதும், அது கூடிய விரைவிலேயே பார்வையாளர்கள் மற்றும் அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து, உடனடி நடவடிக்கை எடுத்த போக்குவரத்து காவல்துறை, சம்பந்தப்பட்ட வாகனங்களை அடையாளம் கண்டு, கார் உரிமையாளர்களுக்கு கடுமையான அபராதங்களை விதித்தது.
* பலேனோ உரிமையாளருக்கு: ரூ. 63,500 அபராதமும்
* பிரெஸ்ஸா உரிமையாளருக்கு: ரூ.57,500 அபராதமும் விதிதக்கப்பட்டது.
அபராதங்கள் விதிக்கப்படுவதற்கான காரணங்களில், ஆபத்தான வகையில் வாகனம் ஓட்டியது, பொது இடத்தில் சட்டவிரோதமாக ஸ்டண்ட் செய்தது, சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டியது மற்றும் பிற போக்குவரத்து விதிமீறல்கள் போன்றவை அடங்கும்.
இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், “இதுபோன்ற செயல்கள் பொதுப் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகின்றன. வாகனங்களை இயக்கும் இளம் தலைமுறையினர் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். தெருக்கள் பந்தயம் நடத்தும் இடங்களும் அல்ல, உங்களது சுய வித்தைகளை காட்டுவதற்கான இடமும் அல்ல” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட நிலையில், சாலைகளில் பாதுகாப்பான போக்குவரத்து நடைமுறைகளின் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
முன்னதாக, ஜூன் 5 ஒரு கல்லூரி அருகே எஸ்யூவி கார் ஒன்றில் ஸ்டண்ட் செய்த திவாகர் ஷர்மா (19) மற்றும் சஞ்சய் குமார் சிங் (20) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களது வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல், ஜூன் 13 அன்று மகேந்திரா தார் வாகனத்தில் ஸ்டண்ட் செய்த இளைஞர் ஒருவர் அதை ரீலாக பகிர்ந்து வைரலானார். இதையடுத்து போலீசார் உடனடியாக ரூ.64,500 அபராதம் விதித்து அவரை கைது செய்தனர். இது சமூக ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்தது.
July 03, 2025 7:11 PM IST