மன்னர் எல்லாளனை தோற்கடிக்க துட்டகைமுனு மன்னருக்கு உதவிய கடோல் யானையின் தந்தங்கள், வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம ஆலய 6வது பெரஹெராவிற்கு முன்பு வெளியே எடுத்து பெரஹெராமுடியும் வரை காட்சிப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இமயமலையில் உள்ள சதாந்த ஏரியின் அருகே வாழ்ந்த ஒரு யானை, ஒரு குட்டியைப் பெற்றெடுத்தது, அந்தக் குட்டியை கடலைக் கடந்து மாகமவில் உள்ள கடோல் காட்டிற்கு கொண்டு வந்து விட்டுச் சென்றுள்ளது.
குறித்த யானைக்குட்டியை கண்ட மீனவர் ஒருவர் இது தொடர்பாக அரண்மனைக்குத் தகவல் வழங்கியுள்ளதுடன், பின்னர் அது அரண்மனையின் காவலில் வளர்ந்துள்ளது. இந்த யானைக் குட்டி கடோல் காட்டில் இருந்து காண்டுபிடிக்கப்பட்டதாலும், மீனவரின் பெயர் கடோல் என்பதாலும் யானைக்கும் கடோல் என்று பெயரிடப்பட்டுள்ளது.
மன்னர் துட்டகைமுனுவுக்கும், மன்னர் எல்லாளனுக்கும் இடையிலான போரில் வெற்றி பெறுவதற்காக, விஜிதபுர கோட்டையை உடைக்க கடோல் யானை உதவியதாக வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போர் வெற்றிக்குப் பிறகு, கதிர்காமத்தில் நடந்த முதல் எசல விழாவில் குறித்த யானையால் தெய்வ சிலை சுமந்து செல்லப்பட்டுள்ளதுடன் மன்னர் துட்டகைமுனுவின் மரணத்திற்குப் பிறகு, யானை பலவீனமடைந்து , மாகமத்திற்குச் சென்றுக்கொண்டிருக்கும் வழியில் உயிரிழந்துள்ளது.
போரமெடில்ல என்ற இடத்தில் யானை அடக்கம் செய்யப்பட்டு, பின்னர், அரச உத்தரவின் பேரில், குறித்த யானையின் தந்தங்கள் கதிர்காம தேவாலயத்திற்கு காணிக்கையாக வழங்கப்பட்டன.
கதிர்காம ஆலயத்தின் அரண்மனையில் வைக்கப்பட்டுள்ள இந்த தந்தங்கள், எசல பெரஹெராவின் ஆறாவது நாளுக்கு முன்பு ஆலயத்தின் பிரதான திரையின் இருபுறமும் காட்சிப்படுத்தப்பட்டு பெரஹெராவுக்குப் பிறகு, தந்தங்களை மீண்டும் உள் அரண்மனையில் வைப்பது வழக்கமாகும்.
சுமனசிறி குணதிலக