Last Updated:
கானா நாட்டின் உயரிய விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது. வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகள் இணைந்து செயல்பட முடிவு செய்தன.
கானா நாட்டின் உயரிய விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
ஐந்து நாடுகளுக்கான தனது பயணத்தை தொடங்கிய பிரதமர் மோடி, முதலாவதாக கானா நாட்டுக்கு சென்றடைந்தார். அங்கு அவருக்கு அந்நாட்டு அதிபர் ஜான் டிராமணி மஹாமா மற்றும் அங்கு வசித்து வரும் இந்திய மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பிரதமர் மோடியை கவுரவிக்கும் வகையில் 21 குண்டுகள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம், வேளாண்மை, மருத்துவம், கல்வி, சுரங்கம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுன் இணைந்து செயல்படுவது என முடிவெடுக்கப்பட்டது.
மேலும், பாரம்பரிய மருத்துவம், வெளியுறவுத்துறை அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்துவது உட்பட நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, கானா நாட்டு இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியளிப்பதுடன், கானா நாட்டு மக்களுக்கு குறைந்த விலையில் மருத்துவ சிகிச்சை கிடைக்க இந்தியா உதவி செய்யும் என்று அறிவித்தார்.
July 03, 2025 11:59 AM IST