பகாங் ஆட்சியாளர் அல்-சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா இன்று நாடு தழுவிய அளவில் மின்-சிகரெட்டுகள், வேப்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற தனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார்.
இளைய தலைமுறையினரிடையே வேப் பயன்பாடு பரவலாகவும், ஆரோக்கியத்தில் ஏற்படும் பாதகமான விளைவுகளாலும், வேப் பயன்பாட்டை ஒட்டுமொத்தமாக தடை செய்ய வேண்டும் என்று அல்-சுல்தான் அப்துல்லா கூறியதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.
வேப் பயன்பாடு முற்றிலுமாக தடை செய்யப்பட வேண்டும். இந்த விஷயத்தில் நாம் மெத்தனபோக்குடன் இருக்கக்கூடாது. அது நம் மக்களுக்கு மேலும் தீங்கு விளைவிக்கும் என்று அவர் கூறினார். பகாங் அரசாங்கம் ஏற்கனவே அத்தகைய தடையை அமல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது என்பதைக் குறிப்பிட்டார்.
கடந்த நவம்பரில் மின்-சிகரெட்டுகள், வேப்களை தடை செய்ய மத்திய அரசை வலியுறுத்தும் போது, சுல்தான் அவற்றை போதைப் பழக்கத்திற்கு ஒரு வகையான நுழைவாயில் என்று விவரித்தார்.
அப்போதிருந்து, பல மாநில அரசாங்கங்கள் 2016, 2015 ஆம் ஆண்டுகளில் முறையே இத்தகைய தடைகளை அமல்படுத்திய ஜோகூர், கிளந்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி வேப் விற்பனைக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளன. அவற்றில் தெரெங்கானு, பெர்லிஸ், கெடா ஆகியவை அடங்கும். அதே நேரத்தில் பகாங் மாநில அரசாங்கம் வேப் பயன்பாட்டை முழுவதுமாக தடை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.