Last Updated:
உலக சாம்பியன்ஷிப் போட்டியில், டிங் லிரேனை வீழ்த்தி தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 வயது குகேஷ், இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றவர் என்ற பெருமையை பெற்றார்.
உலக செஸ் சாம்பியன் குகேஷ் பலவீனமான வீரர் என மீண்டும் வம்பிழுத்திருக்கிறார் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிங்கப்பூரில் நடைபெற்ற கிளாசிக்கல் உலக சாம்பியன்ஷிப் போட்டியில், நடப்பு சாம்பியனான டிங் லிரேனை வீழ்த்தினார் தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 வயது குகேஷ். இதன் மூலம், இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றவர் என்ற பெருமையையும் பெற்றார்.
இந்த நிலையில், கடந்த மாதம் தொடக்கத்தில் நார்வேயில் நடைபெற்ற செஸ் தொடரின் போது குகேஷின் ஆட்டத் திறன் பற்றி கார்ல்சன் கடுமையாக விமர்சித்திருந்தார். ஆனால், அந்த தொடரில் உலகின் நம்பர் ஒன் வீரரான கார்ல்சனை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார் குகேஷ். குகேஷிடம் முதன்முறையாக தோல்வியடைந்த கார்ல்சன், விரக்தியில் டேபிளை குத்தி தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் Rapid & Blitz முறையில் விளையாடப்படும் Grand Chess Tour: குரோஷியாவில் தொடங்கியுள்ளது. இங்கும் குகேஷ் மீதான வன்மத்தைக் கக்கியுள்ளார் கார்ல்சன். விரைவாக விளையாடும் Rapid & Blitz போட்டிகளில் சாதிக்கும் அளவுக்கு குகேஷ் எதுவும் செய்யவில்லை என கூறியுள்ளார் கார்ல்சன்.
முன்னதாக வீரர்கள் அறிமுகம் செய்யப்பட்ட நிகழ்வில், முன்னதாகவே வந்துவிட்ட கார்ல்சனிடம் பல சிறுவர்கள் ஆட்டோகிராப் வாங்கிக் கொண்டிருந்தனர். சற்று நேரத்தில் அவரது அருகே வந்து அமர்ந்த குகேஷுடன் கைகுலுக்கினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
குரோஷியாவில் நடைபெறும் இந்த செஸ் தொடரில், கார்ல்சனும், குகேஷும் 3 முறை நேருக்கு நேர் சந்திக்கவிருக்கின்றனர். 33 வயது உலகின் நம்பர் ஒன் வீரர், 18 வயது இளம் உலக சாம்பியனும் யார் வெற்றி பெறுவார்கள் என செஸ் உலகம் ஆவலுடன் காத்திருக்கிறது.
July 03, 2025 7:24 AM IST