ப. இராமசாமி, தலைவர், உரிமை
என் நீண்டகால நண்பர் சார்ளஸ் சாண்டியாகோ மலேசிய இந்தியர்கள் மத்தியில் காணப்படும் தவறான ஈடுபாடுகளை சரியாகவே சுட்டிக் காட்டியுள்ளார். (காண்க :https://malaysiaindru.my/232080) கல்வியாளர்கள், சமூக சீர்திருத்தவாதிகள் அல்லது அரசியல் தலைவர்களை ஆதரிப்பதற்குப் பதிலாக, மலேசிய இந்திய தொழிலாளி வர்க்க மக்கள் குண்டர் கும்பல் தலைவர்கள், கீழுலகச் செயல்பாட்டாளர்கள் போன்ற தவறான தலைமைகளை மதிக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்தக் கவலைக்குரிய மாற்றம் ஆழமான நெருக்கடியில் இருந்து வருகிறது—இந்திய சமூகத்தில் வலிமையான மற்றும் நம்பகமான தலைமைப்பண்பு முழுமையாகக் காணவில்லை என்பதே உண்மை. ஒருகாலத்தில் இந்தியர்களின் உரிமைகள் மற்றும் மரியாதைக்காக போராடிய தலைவர்கள் நினைவுகளாகவே மட்டுமே உள்ளனர். சர்ச்சைகளுக்கு இடையே இருந்தாலும், மறைந்த எஸ். சாமிவேலுவே, அடித்தள இந்தியர்களிடையே பரந்த அளவில் நம்பிக்கை பெற்ற கடைசி தலைவர்.
இன்று, ம இ கா தனது பழைய வலுவான நிலையை இழந்துவிட்டது; கட்சித் சொத்துக்களை நிர்வகிப்பதில் மட்டுமே ஆர்வம் கொண்டுள்ளது, சமூக நலன்கள் புறக்கணிக்கப்படுகின்றன. அதே நேரத்தில்,டி ஏ பி மற்றும் பிகேஆர் போன்ற கட்சிகளில் உள்ள இந்தியத் தலைவர்கள், பல்லினக் கலவையின் பெயரில், இந்தியர்களுக்குரிய விவகாரங்களை மறந்துவிட்டார்கள்.
சாண்டியாகோ இந்தப் பிரச்சினையை சுட்டிக்காட்டியுள்ளார், ஆனால் அதன் அடிப்படை காரணங்களை ஆராயவில்லை. கொலை செய்யப்பட்ட கும்பல் தலைவர்களுக்கு நடைபெறும் பெரிய அளவிலான இறுதி ஊர்வலங்கள் போன்ற நிகழ்வுகள், அவர்களின் குற்றவாளித்தன்மையை மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட சமூகத்தில் அவர்கள் ஒரு முரனான வழிகாட்டியாக பார்க்கப்படுவதையும் பிரதிபலிக்கின்றன.
நியாயமான மற்றும் நீதியான சமூகத் தலைவர்கள் இல்லாத நேரத்தில், கும்பல் தலைவர்கள் சிஸ்டத்திற்கே எதிரானவர்கள் என்ற பார்வையில் சமூகத்தில் ஒரு “துணிவான” சின்னமாக பார்க்கப்படுகிறார்கள். அவர்களின் நடவடிக்கைகள் குற்றவியல் மற்றும் சமூகத்திற்கு கேடானவை என்றாலும், அவர்கள் காட்டும் அதிகாரத்திற்கான எதிர்ப்பு சிலருக்கு குறிப்பாக பின்தங்கிய சமூகத்திற்கு வலிமை தரும் செயலாகவே தோன்றுகிறது. சமூகத்தில் காலியான அதிகார இடத்தை நிரப்புவதற்காக, மக்கள் இப்படியான பாத்திரங்களை பின்பற்ற நேரிடுகிறது.
இந்த நிலையை மாற்ற, இந்திய சமூகத்திற்கு துணிவான, வலிமையான, தார்மீகமான தலைவர்கள் தேவை. இவர்கள் ஒரு மதச்சார்பற்ற, ஆனால் இனச்சார்பான நியாயத்தின் அடிப்படையில், சமூக உரிமைகளுக்காகவும் மரியாதைக்காகவும் போராடவேண்டும். இப்படிப்பட்ட தலைமை உருவாக்கப்படாவிட்டால், மக்கள் கீழுலகத் தலைவர்களை ஆதரிப்பது தொடரும்.
இறுதியில், குற்றம் சமூகத்தின் மீதில்லை; மாற்றாக, இந்தியர்களுக்கு சமமான அங்கீகாரம், வாய்ப்பு மற்றும் நீதியை வழங்கத் தவறிய ஒரு இனவெறி அடிப்படையிலான அரசியல் அமைப்பில்தான் குற்றம் இருக்கிறது.