சீனாவின் குவாங்சி பகுதியில், ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், இடிந்து விழும் கூரையில் சிக்கிய ஒருவரை வியத்தகு முறையில் ட்ரோன் மீட்டது. இது குறித்த வீடியோ, தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சீனாவில் பெய்த கனமழையால் ஆறுகள் நிரம்பி வழிந்து, தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 6 பேர் உயிரிழந்துள்ளனர், பலர் காணாமல் போயுள்ளனர் மற்றும் 80,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
குறிப்பாக, சீனாவின் குய்சோ மாகாணம் பலத்த மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். இதுவரை கிட்டத்தட்ட 300,000 பேர் இடம்பெயர்ந்தனர். குறிப்பாக டான்ஷாய், ரோங்ஜியாங், லீஷான் மற்றும் கைலி பகுதிகளில் பாதிப்பு கடுமையாக இருந்தது. அதிக அளவு வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் உள்ளூர்வாசிகள் கடும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். பேரிடர் மேலாண்மை குழுக்கள் ஆங்காங்கே நிவாரணப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.
இதற்கிடையில், ஒரு வாரத்தில் இரண்டு முறை தாக்கிய கனமழை வெள்ளத்தில் இருந்து அங்குள்ள மக்களால் மீள முடியவில்லை. இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கிய ஒருவரை ட்ரோன் காப்பாற்றியது. குவாங்சி பகுதியில் ஒரு கட்டிட மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்த ஒருவரை வெள்ளம் சூழ்ந்தபோது, ஒரு ட்ரோன் அவரைப் பாதுகாப்பாக மீட்டது.
3 ஆறுகள் சங்கமிக்கும் இடத்திலும், 3,00,000 குடியிருப்பாளர்களின் தாயகமாகவும் அமைந்துள்ள இந்த இடத்தில், கடந்த சனிக்கிழமை கனமழை பெய்தது. இந்த கனமழையால், ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆற்றங்கரை நகரமான ரோங்ஜியாங்கின் பாதி பகுதி நீரில் மூழ்கியது. இதனால் குடியிருப்பாளர்கள் உயரமான இடங்களுக்கு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அதேபோல் கடந்த வார தொடக்கத்தில், ரோங்ஜியாங்கில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்தது, அதில் 8 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 80,000-க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. 72 மணி நேரம் பெய்த மழையின் அளவானது ஜூன் மாதத்தில் நகரத்தின் சராசரி மழையின் அளவைவிட இரண்டு மடங்கு அதிகமாகும்.
ஊடக அறிக்கைகளின்படி, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மக்களை மீட்பதற்காக சீனா மேம்பட்ட தொழில்நுட்ப உபகரணங்களைப் பயன்படுத்தி வருகிறது. வைரலாகும் வீடியோவில், திரைப்படம் போன்ற மீட்பு நடவடிக்கையில், 100 கிலோ எடையுள்ள சுமையைத் தூக்கக்கூடிய ட்ரோன் மூலம் ஒரு நபர் பாதுகாப்பாக கொண்டு செல்லப்படுவதைக் காணலாம்.
அறிக்கையின்படி, கடந்த சனிக்கிழமையன்று ரோங்ஜியாங்கில் 40,000-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. குவாங்சியில் ட்ரோன் மூலம் காப்பாற்றப்பட்ட வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, இந்த ட்ரோன் மீட்பு குறித்து நெட்டிசன்கள் தங்கள் வியப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அதில் ஒரு யூசர், மீட்புக் குழுக்களில் பாதி பேர் செய்ய முடியாத வேலையை இப்போது சீனாவின் ட்ரோன்கள் செய்கின்றன என்று கூறியுள்ளார். மற்றொரு யூசர், மலைகளில் சிக்கித் தவிக்கும் பயணிகளை மீட்பதற்கும் இது பயனுள்ளதாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
July 02, 2025 1:49 PM IST