Last Updated:
பங்குச் சந்தைகள் வீழ்ச்சி, கடன் வட்டி உயர்வு, அதிக பணவீக்கம் ஆகியவற்றால் தளர்ந்திருந்த முதலீட்டாளர்களை, டிரம்ப் விதித்த கடுமையான வரிகள் தடுமாற வைத்தன.
அமெரிக்க டாலர் மதிப்பு, அரை நூற்றாண்டு காலத்துக்கு பிறகு அதிக பலவீனம் அடைந்துள்ளது.
சர்வதேச நாடுகள், முக்கிய வர்த்தக கூட்டாளி நாடுகளின் கரன்சிக்கு எதிரான டாலர் மதிப்பு கடந்த ஆறு மாதங்களில், 10 சதவீதத்துக்கு மேல் வீழ்ச்சி கண்டிருக்கிறது. இந்த அளவு வீழ்ச்சியை, 1973ம் ஆண்டில் தான் அது கண்டது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றது முதல், நிலையற்ற வரி விதிப்புகள், வரி மாற்றங்கள், அதிக உற்பத்தி கொண்ட நாடுகளுடன் பிணக்குகள் என்று அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள், டாலர் மதிப்பில் நிலையற்ற தன்மைக்கு காரணம் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்காவின் கடும் வரி விதிப்பு மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக, வெளிநாட்டினரின் முதலீடுகள் குறைந்து வருகின்றன. இதனால், அரசு முன்பு எப்போதும் இல்லாத வகையில், அதிக கடன் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. டிரம்பின் வர்த்தக திட்டங்கள், பணவீக்க கவலைகள், அதிகரிக்கும் அரசின் கடன் ஆகியவை அமெரிக்க டாலரின் மதிப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
இதற்கிடையே, வரி விதிப்புகளை அடிக்கடி நிறுத்தி வைப்பதும் தினசரி மாற்றி அறிவிப்பதும், முதலீட்டாளர்கள், கரன்சி வணிகர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இதனால், டாலர் மதிப்பு சரிகிறது. டிரம்ப் அதிபராக பதவியேற்றதும், டாலர் மதிப்பு வேகமாக உயர்ந்தது. பங்குச் சந்தைகள் வீழ்ச்சி, கடன் வட்டி உயர்வு, அதிக பணவீக்கம் ஆகியவற்றால் தளர்ந்திருந்த முதலீட்டாளர்களை, டிரம்ப் விதித்த கடுமையான வரிகள் தடுமாற வைத்தன.
பொருளாதார நிபுணர்கள், முதலீட்டாளர்கள், ஆய்வாளர்கள் என எந்த பிரிவினரும் கணிக்க முடியாத அளவில் வரி விதிப்பு இருந்ததால், அமெரிக்க சந்தைகளில் பங்குகள், பத்திரங்கள் முதல் டாலர் வணிகம் வரை பீதி தொற்றிக் கொண்டது. அப்போது டாலர் மதிப்பில் ஏற்பட்ட தாக்கம், தற்போது 1973ம் ஆண்டில், அதாவது அரை நூற்றாண்டுக்கு முன் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு நிகரான சூழலை தற்போது ஏற்படுத்தி உள்ளது. டாலரின் இந்த நிலையால், இந்திய ரூபாய் வலுப்பெற்று ஸ்திரத்தன்மையுடன் வணிகமாவது நம் நல்வாய்ப்பு என கருதலாம்.
July 02, 2025 12:00 PM IST