புதுடெல்லி: உலகில் அதிவேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா நீடிக்கும் என்று மார்கன் ஸ்டான்லியின் சர்வதேச ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த மார்கன் ஸ்டான்லி நிறுவனம் உலக நாடுகளின் பொருளாதாரம் குறித்து வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சீனா உள்ளிட்டவை தங்களின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க அதிக தொகையை செலவிட்டு வருகின்றன. ஆனால் சர்வதேச பொருளாதார வளர்ச்சி மந்தமாகவே இருக்கிறது. கரோனா பெருந்தொற்று காலத்துக்கு பிறகு சர்வதேச பொருளாதாரம் முழுமையாக மீட்சி அடையவில்லை.
பரஸ்பர வரி விதிப்பு என்ற பெயரில் பல்வேறு நாடுகள் மீது அமெரிக்க அரசு வர்த்தக வரிகளை விதித்துள்ளது. இதன்காரணமாக கடந்த ஏப்ரலில் அமெரிக்காவின் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்தது. இது உலகம் முழுவதும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. நடப்பாண்டில் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி 1.5 சதவீதமாக இருக்கும்.
வரும் 2026-ம் ஆண்டில் அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஒரு சதவீதமாக இருக்கும். நடப்பாண்டில் அமெரிக்காவில் பண வீக்கம் 3 சதவீதமாக உள்ளது. சட்டவிரோத குடியேறிகளை அமெரிக்கா வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகிறது. இதன்காரணமாக அமெரிக்காவில் தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும். இது அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மோசமாகப் பாதிக்கும்.
ஐரோப்பாவின் பொருளாதாரம் நடப்பாண்டில் ஒரு சதவீதமாக இருக்கும். ஐரோப்பிய நாடுகளின் ஏற்றுமதி கணிசமாக பாதிக்கப்பட்டிருப்பதால் ஒட்டுமொத்த ஐரோப்பாவின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டு உள்ளது. சீனாவின் வீட்டு வசதித் துறை பெரும் சரிவை சந்தித்து வருகிறது. இது அந்த நாட்டின் பொருளாதாரத்தை மிகக் கடுமையாக பாதித்து உள்ளது. நடப்பாண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதமாக இருக்கும். வரும் 2026-ம் ஆண்டில் அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.2 சதவீதமாக குறையும்.
ஜப்பானின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் ஒரு சதவீதமாக இருக்கும். அடுத்த ஆண்டில் அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி 0.5 சதவீதமாக குறையக்கூடும். லத்தீன் அமெரிக்க நாடுகளின் பொருளாதாரத்தில் தொடர்ந்து மந்தநிலை காணப்படுகிறது. குறிப்பாக பிரேசில், மெக்ஸிகோ நாடுகளின் வளர்ச்சி தடைபட்டிருக்கிறது. அமெரிக்காவின் சில கொள்கை முடிவுகள் லத்தீன் அமெரிக்க நாடுகளின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்து உள்ளன.
இந்தியாவின் ஏற்றுமதி கணிசமாக அதிகரித்து வருகிறது. அந்த நாட்டின் உள்நாட்டு சந்தை அபரிமிதமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இதன்காரணமாக உலகளாவிய அளவில் அதிவேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா நீடிக்கும். நடப்பாண்டில் அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.9 சதவீதமாக இருக்கும். வரும் 2026-ம் ஆண்டின் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.4 சதவீதமாக அதிகரிக்கும். இவ்வாறு ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.