Last Updated:
இந்தியா-இங்கிலாந்து இடையேயான 2ஆவது டெஸ்ட் பர்மிங்காமில் இன்று தொடங்குகிறது.
இந்தியா- இங்கிலாந்து இடையேயான 2ஆவது டெஸ்ட் இன்று தொடங்குகிறது.
இந்தியா – இங்கிலாந்து இடையிலான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்குகிறது. சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்தில் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் தொடரில் விளையாடி வருகிறது.
முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்திடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி கண்டது. இந்திய அணியைப் பொறுத்தவரை டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டாலும் மிடில் மற்றும் கடைசி வரிசையில் களமிறங்கும் வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுப்பது பின்னடைவாக உள்ளது. தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் முதலாவது போட்டியில் பெரிய அளவில் சோபிக்காத போதும், இன்று தொடங்கும் இரண்டாவது ஆட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பந்துவீச்சில் இந்திய அணி பும்ராவை மட்டுமே நம்பி இருப்பது போல் எண்ணத் தோன்றுகிறது. இருப்பினும் அவர் 2ஆவது டெஸ்ட்டில் விளையாடுவாரா இல்லையா என கடைசி நேரத்தில் முடிவு செய்யப்படும் என கேப்டன் சுப்மன் கில் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கில், அதிக பணிச்சுமை காரணமாக 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பும்ரா விளையாட உள்ளதாகவும், எந்த 3 போட்டிகளில் அவர் விளையாடுவார் என முடிவு செய்யவில்லை என்றும் கூறினார். 2வது டெஸ்ட் போட்டியில் விளையாட பும்ரா தயாராக இருக்கும் நிலையில், அவரின் பணிச்சுமை கருதி கடைசி நேரத்தில் முடிவு செய்யப்படும் என்றார்.
பர்மிங்காம் மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதால், மற்றொரு தமிழ்நாடு வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேநேரம், இரண்டு ஸ்பின்னர்களுடன் விளையாட வாய்ப்பு இருப்பதாக கேப்டன் கில் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் முதல் டெஸ்ட்டில் கண்ட தோல்வியில் இருந்து இந்திய அணி மீண்டுவரும் என்ற நம்பிக்கையில் இந்திய ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
July 02, 2025 8:05 AM IST