Last Updated:
PM Modi | பிரதமர் நரேந்திர மோடி வரும் 11-ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் கட்சிகள் தங்களது பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க போவதாக அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஏற்கனவே இருமுறை தமிழ்நாட்டிற்கு வந்து சென்ற நிலையில், வரும் 8 ஆம் தேதி மீண்டும் தமிழ்நாடு வருகிறார். இந்த நிலையில், பிரதமர் மோடியும் தமிழ்நாடு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரேசிலில் நடைபெற இருக்கும் உச்சி மாநாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று செல்லும் பிரதமர், வரும் 9-ஆம் தேதி வரை தாயகம் திரும்புகிறார். அதனைத் தொடர்ந்து, வரும் 11-ஆம் தேதி அவர் தமிழ்நாடு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பயணத்தின்போது, 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே 5 நாடுகள் பயணத்தை இன்று தொடங்கும் பிரதமர் நரேந்திர மோடி, கானா, டிரினிடாட் அண்ட் டொபாக்கோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா நாடுகளுக்கு செல்கிறார். முதல்கட்டமாக, ஆப்பிரிக்காவில் உள்ள கானா நாட்டுக்கு இன்று செல்கிறார். 30 ஆண்டுகளில் முதல்முறையாக கானாவுக்கு பயணம் மேற்கொள்ளும் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை மோடி பெறுகிறார்.
2 நாள் பயணத்தை முடித்துவிட்டு, டிரினிடாட் அண்ட் டொபாக்கோ நாட்டுக்கு நாளை செல்கிறார். அந்நாட்டு அதிபர் மற்றும் பிரதமரை சந்திக்கும் மோடி, நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்திலும் உரையாற்ற உள்ளார். பயணத்தின் மூன்றாவது கட்டமாக, அர்ஜென்டினாவுக்கு சென்று, அந்நாட்டு அதிபருடன் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்துகிறார்.
இதனைத் தொடர்ந்து, பிரேசிலுக்கு 5-ஆம் தேதி செல்லும் மோடி, 17ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்கிறார். மாநாட்டின் இடையே பல்வேறு நாடுகளின் தலைவர்களை மோடி சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார். தனது பயணத்தின் இறுதிக்கட்டமாக, நமீபியாவுக்கு பிரதமர் மோடி செல்ல உள்ளார். அந்நாட்டு அதிபருடன் இருதரப்பு பேச்சு நடத்துவதுடன், நாடாளுமன்றத்தில் உரையாற்றவும் திட்டமிட்டுள்ளார். தனது பயணத்தை முடித்துக் கொண்டு, வரும் 9ஆம் தேதி டெல்லி திரும்புகிறார்.
கடந்த 2016-ஆம் ஆண்டில் ஒரே நேரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட 5 நாடுகள் பயணத்தை மேற்கொண்ட பிறகு, தற்போதுதான் 5 நாடுகள் பயணத்தை பிரதமர் மோடி மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.
July 02, 2025 7:39 AM IST