லக்னோ: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்.
லக்னோவில் மாலை 7.30 மணியளவில் தொடங்கிய ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.
லக்னோ அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக குயிண்டன் டி காக் மற்றும் கே.எல்.ராகுல் இறங்கினர். இதில் குயிண்டன் நான்கு பந்துகளில் ஒரு சிக்ஸ் அடித்து வெளியேறினார். இன்னொரு புறம் கே.எல்.ராகுல் 31 பந்துகளுக்கு 33 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து இறங்கிய தேவ்தத் படிக்கல் 7 ரன்கள், மார்க்கஸ் ஸ்டாயினிஸ் 58 ரன்கள், நிக்கோலஸ் பூரன் 32 ரன்கள், ஆயுஷ் படோனி 20 ரன்கள் எடுத்துனர். இறுதியாக குருணல் பாண்டிய இரண்டு ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி மொத்தம் 163 ரன்கள் எடுத்திருந்தது.
164 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சாய் சுதர்ஷன் (31 ரன்கள்) மற்றும் ஷுப்மன் கில் (21 ரன்கள்) இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ஆனால் அடுத்தடுத்து இறங்கிய கேன் வில்லியம்சன், பி.ஆர்.சரத் தலா ஒன்று மற்றும் இரண்டு ரன்களுடன் அவுட் ஆகவும் அணி தடுமாறியது. விஜய் ஷங்கர் 17 ரன்கள், தர்ஷன் 12 ரன்கள், ராகுல் தேவாட்டியா 30 ரன்கள், ரஷீத் கான் 0, உமேஷ் யாதவ் இரண்டு ரன்கள் எடுத்தனர்.
இறுதியாக நூர் அகமது அடித்த பந்தை குயிண்டன் கேட்ச் செய்ததைத் தொடர்ந்து 33 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி.