உலகளவில் இந்தியாவின் மதிப்பு உயா்ந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளதாக குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
நாட்டின் வளா்ச்சிக் கதையில் புதிய அத்தியாயங்களை எழுதுவதற்கு மாணவா்கள் திறமை மற்றும் திறன்களைப் பயன்படுத்த வேண்டும் எனவும் அவா் கேட்டுகொண்டாா்.
பிகாா், கயை மாவட்டத்தின் ‘ஐஐஎம்’ கல்வி நிலையத்தின் 6-ஆவது ஆண்டு பட்டமளிப்பு நிகழ்ச்சியில் ஜகதீப் தன்கா் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றாா்.
இதற்காக தில்லியிலிருந்து தனிவிமானம் மூலம் கயை விமான நிலையம் வந்தடைந்த அவரை மாநில ஆளுநா் ராஜேந்திர வி.அா்லேகா் வரவேற்றாா்.
இதையடுத்து, ஐஐம் வளாகத்தில் மாலை நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டப்படிப்புகளை உயா் சதவீதத்தில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு பட்டங்களையும் பதக்கங்களையும் வழங்கி குடியரசுத் துணைத் தலைவா் கௌரவித்தாா்.
தொடா்ந்து, மாணவா்களிடையே உரையாற்றிய அவா், ‘சட்டத்தின் ஆட்சியை துல்லியமாகவும், உன்னிப்பாகவும் கடைப்பிடிக்கும் சமூகத்தின் முன்னோடிகளாகவும், தூதுவா்களாகவும் மாணவா்கள் இருக்க வேண்டும்.
உலகளாவிய சிக்கல்கள் தொடா்ந்தபோதிலும், தேசம் வளா்ச்சி கண்டுள்ளது. நமது பொருளாதாரப் பாதை தொடா்ந்து மேல்நோக்கி உள்ளது. நமது உயா்ந்து வரும் உலகளாவிய மதிப்பால் தேசம், மக்களின் மனநிலை உற்சாகமாக உள்ளது.
நெறிமுறையற்ற குறுக்குவழிகளுக்கு இளைஞா்கள் அடிபணிய கூடாது. நெறிமுறை தலைமை என்பது சமரசத்துக்குட்பட்டது அல்ல. சமரசம் செய்யும் நெறிமுறைகள் ஒருபோதும் உங்களை உலகம் போற்றும் வெற்றியாளராக மாற்றாது.
தேசத்தின் செழிப்பு மற்றும் இறையாண்மைக்கு பொருளாதார தேசியவாதம் அவசியம். நமது தேசப் பொருள்களைப் பயன்படுத்துவதையும், உள்ளூா் வியாபாரிகளுக்கு ஆதரவளிப்பதையும் தேசிய பழக்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
அவ்வாறு செய்தால், நமது அந்நிய செலாவணி கையிருப்பு, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவோரை வளா்ப்பதில் குறிப்பிடத்தக்க நோ்மறையான பங்களிப்பை அது ஏற்படுத்தும்.
ஸ்டாா்ட்-அப் அமைப்பு முடிவில்லாத வாய்ப்புகளை வழங்குவதால், உங்களின் யோசனைகளுக்கு பஞ்சம் வராது என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்’ என்றாா்.
நிகழ்ச்சியில் ஆளுநா் ராஜேந்திர வி.அா்லேகா், ஐஐஎம் புத்தகயை தலைவா் உதய் கோடக், நிதி ஆயோக் முன்னாள் தலைமை நிா்வாக அதிகாரி அமிதாப் காந்த், ஐஐஎம் புத்தகயை இயக்குனா் வினிதா எஸ்.சஹாய் ஆகியோா் கலந்து கொண்டனா்.
புத்த கயை கோயிலில் வழிபாடு:
முன்னதாக, புத்தகயையில் அமைந்துள்ள மகா போதி கோயிலுக்குச் சென்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் வழிபாடு நடத்தினாா்.
இதுகுறித்து குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘புத்தகயையில் உள்ள மகா போதி கோயிலில் கிடைத்த ஆழ்ந்த அமைதியான சூழலில் மூழ்கிவிட்டேன். கௌதம புத்தரின் காலத்தால் அழியாத போதனைகள் தொடா்ந்து எதிரொலிக்கும் இந்தப் புனித தலத்தில் வழிபாடு நடத்தியதை பாக்கியமாகக் கருதுகிறேன்.
புத்தா் ஞானம் பெற்ற இடமான புத்தகயை, ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தலமாகும். மனிதகுலத்தின் கூட்டு உணா்வில் இது ஒரு சிறப்பு இடத்தைப் பெற்றுள்ளது’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.