ஆந்திர மாநிலம், கோவிந்தப்பா கண்டிகையை சேர்ந்தவர் திலீப் (வயது 25). கியாஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தார். இவரது சகோதரர் வினய் (20). இவர் திருச்சானூரிலுள்ள சகோதரர் வீட்டில் தங்கி இருந்து திருப்பதி தேவஸ்தானத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்தார்.
இருவரும் நேற்று முன்தினம் இரவு திருச்சானூர் அடுத்த கலுவ கட்டா பகுதிக்கு காரில் வந்தனர். அப்போது காரை பிளாஸ்டிக் கவரால் மூடிவிட்டு காருக்குள் சென்று ஏ.சியை ஆன் செய்தனர். பின்னர் இருவரும் அதிக அளவு மது குடித்தனர்.
ஏ.சி இரவு முழுவதும் ஓடிக்கொண்டு இருந்ததால் காரில் இருந்த பெட்ரோல் தீர்ந்து போனது. இதனால் ஏ.சி வேலை செய்யவில்லை. இருவரும் அதிக மது போதையில் இருந்ததால் ஏசி வேலை செய்யவில்லை என்பது தெரியவில்லை. காரில் காற்றோட்டம் இல்லாததால் இருவரும் மூச்சு திணறி இறந்தனர். கார் முழுவதும் பிளாஸ்டிக் கவரால் மூடப்பட்டு இருந்ததால் காரில் இருப்பவர்கள் வெளியே தெரியவில்லை.
நேற்று காலை திலீப்பின் தந்தை சந்தேகத்தின் பேரில் காரின் மீது இருந்த கவரை அகற்றினார். அப்போது மகன்கள் இருவரும் காரிலேயே இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
திருச்சானூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 பேரின் பிணங்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரில் ஏசியை ஆன் செய்து விட்டு மதுபோதையில் தூங்கினால் இது போன்ற விளைவுகளை சந்திக்க நேரிடும் குடிமகன்கள் உஷாராக இருக்க வேண்டும்என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.