Last Updated:
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்ஹாம் நகரில் நாளை தொடங்க உள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையை ஏற்படுத்தும்.
இளம் கேப்டன் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி அந்த சாதனையை ஏற்படுத்துமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
இந்தப் போட்டியில் முதல் ஆட்டம் லீட்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. முதல் நான்கு நாட்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி கடைசி நாளில் மிக மோசமாக பீல்டிங் செய்ததால் வெற்றி இந்தியாவின் கையை விட்டு நழுவியது.
மேலும் இந்திய அணி சற்று கூடுதலாக ரன்கள் சேர்த்திருந்தால் தோல்வியை தவிர்த்து இருக்கலாம் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இளம் கேப்டன் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி முதல் போட்டியில் நல்ல அனுபவத்தை பெற்றிருக்கும் என்றும் இரண்டாவது மேட்சில் இந்திய அணி கண்டிப்பாக வெற்றி பெறும் என்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
இந்த நிலையில் இந்திய அணி வரலாற்று சாதனை படைப்பதற்கான வாய்ப்பு இந்தப் பர்மிங்ஹாம் மைதானத்தில் ஏற்பட்டிருக்கிறது. அதாவது இந்த மைதானத்தில் எந்த ஒரு ஆசிய அணியும் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது கிடையாது.
எனவே இந்தப் போட்டியில் இந்திய அணி வென்றால் முதல் முறையாக பர்மிங்ஹாமில் வெற்றி பெற்ற ஆசிய அணி என்ற சாதனையை ஏற்படுத்தும். முன்பு இங்கு இந்திய அணி எட்டு போட்டிகளில் விளையாடியுள்ளது.
July 01, 2025 7:47 PM IST