இம்பால்,மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் மொங்ஜாங் கிராமத்தில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, இன்று மதியம் 2 மணியளவில் அவர்களை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் சிலர், திடீரென அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
இதில், 60 வயது பெண் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். அவர்கள் மிக நெருங்கிய தொலைவில் இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனினும், இந்த தாக்குதலுக்கு எந்தவொரு குழுவும் பொறுப்பேற்கவில்லை.
துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் தானியங்கி ஆயுதங்களை பயன்படுத்தி உள்ளனர் என தெரிய வந்துள்ளது. இதற்கேற்ப, 12-க்கும் மேற்பட்ட காலி தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டன. உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. தாக்குதலுக்கான காரணமும் தெளிவாக தெரியவில்லை.
இதனை தொடர்ந்து, அந்த பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் போலீசார் மற்றும் கூடுதல் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.
மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதத்தில் மெய்தி மற்றும் குகி என இரு குழுவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக பரவியதில் இரு தரப்பிலும் 240 பேர் கொல்லப்பட்டனர். வன்முறையை தொடர்ந்து, 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். இதனை தொடர்ந்து, ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டனர். எனினும், அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் பரவி வருகின்றன.
The post மணிப்பூரில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் உயிரிழப்பு appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.