கேரளா மாநிலம், திருச்சூரை அடுத்துள்ளது புதுக்காடு எனும் பகுதி. இந்தப் பகுதி காவல் நிலையத்திற்கு கையில் ஒரு பையுடன், முழு மது போதையில் வந்த இளைஞர், தன் கையில் இருந்த பையை போலீஸிடம் கொடுத்து, “இதில் எனக்குப் பிறந்த இரு குழந்தைகளின் எலும்புகள் இருக்கிறது” எனத் தெரிவித்தார். இதனைக் கேட்டவுடன் காவலர்கள் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பின்னர் அந்த இளைஞரிடம் விசாரணை நடத்தியபோது, அவரது பெயர் செனக்கலா பவின் (25) என்பதும், அவர் அம்பலூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நூலுவள்ளியைச் சேர்ந்த முள்ளக்காபரம்பில் அனிஷா (22) என்ற பெண்ணுடன் லிவிங் டுகெதரில் புதுக்காடு பகுதியில் வசித்துவந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து புதுக்காடு காவல்துறையினர் அனிஷாவையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு, பவினுக்கு 20 வயதும், அனிஷாவுக்கு 18 வயதும் இருக்கும்போது, இருவருக்கும் இடையே சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிறகு இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்துவந்துள்ளனர். இதில், 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இருவருக்கும் ஒரு குழந்தை பிறந்துள்ளது.
அந்தக் குழந்தையை 2021, நவம்பர் மாதம் 6 ஆம் தேதி அனிஷா வீட்டில் புதைத்துள்ளனர். பிறகு 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தையை 2024, ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி பவின் தனது தாய் வீட்டில் புதைத்துள்ளார். முதல் குழந்தை புதைக்கப்பட்டதிலிருந்து 8 மாதங்களுக்குப் பிறகு அதன் எலும்புகளையும், இரண்டாவது குழந்தை புதைக்கப்பட்டதிலிருந்து நான்கு மாதங்களுக்குப் பிறகு அதன் எலும்புகளையும் தோண்டி எடுத்துள்ளனர்.
இந்த எலும்புகளைத் தான் பவின், காவல் நிலையத்தில் கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். மேலும், அந்த எலும்புகளை வைத்து சாங்கியம் செய்ய இருந்ததாகவும், அதன் மூலம் தனது குழந்தைகள் மோட்சத்தை அடையும் எனக் காத்திருந்ததாகவும் பவின் போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
கைப்பற்றப்பட்ட எலும்புகளை காவல்துறையினர் தடயவியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஆய்வுக்கு அனுப்பினர். அங்கு நடத்தப்பட்ட ஆய்வில், அது பிறந்த பச்சிளம் குழந்தைகளின் எலும்புகள் தான் என்பது முதற்கட்டமாக உறுதியாகியுள்ளது. மேலும், தடயவியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் அந்த எலும்புகளை ஆய்வு செய்துவருகின்றனர்.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், பவின் – அனிஷா இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்துவந்துள்ளனர். ஆனால், அனிஷாவுக்கு வேறு ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது பவினுக்குப் பிடிக்காததால் அவருக்கும் அனிஷாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பவின், வேறு ஒருவருடன் அனிஷா செல்ல விரும்பாமல், அவரைப் பழிவாங்கும் எண்ணத்தில் இருவரும் சேர்ந்து செய்த குற்றத்தை காவல் நிலையத்திற்கு வந்து தெரிவித்துள்ளார் எனத் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த விவகாரத்தில் முழு விசாரணை நடத்திய பிறகு உண்மை காரணம் தெரியவரும் எனவும் சொல்லப்படுகிறது.
June 30, 2025 3:42 PM IST
பெற்ற குழந்தைகளைக் கொன்று எலும்புகளுடன் காவல் நிலையம் வந்த இளைஞர்… போலீஸ் விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சி