கோலியின் டி20 உலகக் கோப்பை இந்திய அணி இடம் பற்றி எந்த நேரத்தில் சர்ச்சைகள் எழுந்ததோ அப்போது முதல் இதோ பார் நான் என்ன பாஃர்மில் இருக்கிறேன் தெரியுமா? என்ற ரீதியில் விராட் கோலி தன் சொந்த நலன்களுக்காக ஸ்கோர்களை எடுப்பது என்பது இந்த ஐபிஎல் தொடரில் வழக்கமாகி வருகிறது. அணியின் தோல்விக்கு வித்திடும் எந்த சதமும் சொந்த சதமே தவிர மற்றபடி பயனற்ற சதங்களே என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் இப்போது பார்க்கப்படும் ஸ்மார்ட் ஸ்ட்ரைக் ரேட்டின்படி நாம் நுண்பகுப்பாய்ந்து கோலியின் நேற்றைய 67 பந்துகள் 9 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் எடுத்த 8வது ஐபிஎல் சதத்தைப் பார்த்தோமானால் 13 பந்துகளில் கோலி 60 ரன்களை பவுண்டரிகள் மூலம் எடுக்க முடிகிறது என்றால் மீதம் ஆடிய 54 பந்துகளில் அவர் எடுத்த ரன்கள் வெறும் 40 ரன்களே. இதுதான் அணியைத் தோல்விக்கு இட்டுச் செல்கிறது என்பதுதான் ஸ்மார்ட் ஸ்ட்ரைக் ரேட் தத்துவமாகும்.
இலக்கை நிர்ணயிக்கும் போது ஒரே ஒரு வீரர் 20 ஓவர் வரை நின்று 71 பந்துகளில் 113 ரன்களை எடுப்பது வெளிப்பூச்சுக்கு வாய்ப்பந்தலுக்கு பெரிய இன்னிங்ஸ் என்றும், இவரும் ஆடாவிட்டால் ஆர்சிபி நிலை இன்னும் மோசமாகியிருக்கும் என்றெல்லாம் முட்டுக்கொடுப்புகள் உண்மையான நிலவரத்தை மறைக்கப் பயன்படுபவையே அன்றி வேறில்லை. இவரது இன்னிங்ஸை பட்லரின் சதத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இன்னும் விவரம் புரியும். பட்லரும் 9 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என்று 13 பந்துகளில் 60 ரன்களை எடுத்துள்ளார். மீதி 45 பந்துகளில் 40 என்று சேசிங்கில் கோலியை விட பெட்டர் ஸ்ட்ரைக் ரேட் எடுத்துள்ளார்.
சேசிங்கில் ஒரு வீரர் தொடக்கத்தில் இறங்கி அணியை வெற்றி பெறச் செய்யும் நோக்கத்துடன் இன்னிங்சை திட்டமிடுவதில் தவறில்லை. ஆனால் இலக்கை நிர்ணயிக்கும் போது, கோலி தொடக்கத்தில் இறங்கி 20 பந்துகளில் 40-45 ரன்களை எடுக்க வேண்டும், அப்படி எடுத்து ஆட்டமிழந்தால் கூட பரவாயில்லை. பவர் ப்ளேயில் 70-75 ரன்கள் வருவது என்பது இலக்கை 200 ரன்களுக்கும் அப்பால் கொண்டு செல்ல உதவும்.
ஒரு சிக்சர் அடித்து விட்டு அடுத்த இரண்டு பந்துகளை டாட்பாலாக ஆடுவது 3 பந்துகளில் 6 ரன்கள் என்ற கணக்கில்தான் வரும். நேற்று கோலி ஆடிய 71 பந்துகளை சூரிய குமார் யாதவ், ரோஹித் சர்மா, இஷான் கிஷன், சுனில் நரைன், ட்ராவிஸ் ஹெட், மார்க்ரம், கிளாசன் ஆடியிருந்தால் 140 ரன்களை எடுத்திருப்பார்கள். அணியின் ஸ்கோர் 210-220 ரன்களை எட்டியிருக்கும்.
நேற்றைய ஜெய்ப்பூர் பிட்சும் 220 ரன்கள் பிட்ச்தான். இதில் கோலி ஒருமுனையில் நின்று கொண்டு மொத்தம் 120 பந்துகளில் 71 பந்துகளைச் சாப்பிட்டு விட்டு அதில் தன் சொந்த சதத்தை குறிவைத்து ஆடுவது என்பது யாருக்கோ தன்னை நிரூபிப்பதற்காகவும் சுயநல நோக்குடனும், தன் ஸ்பான்சர்களைத் திருப்தி செய்யவும் ஆடும் இன்னிங்ஸே தவிர அணியின் வெற்றிக்கு உதவாது.
ஆர்சிபி பற்றி அம்பாத்தி ராயுடு வைக்கும் விமர்சனம் மிகச்சரியானது. அனைத்து டாப்வீரர்களும் பவர் ப்ளே அதையொட்டிய கிரீமி ஓவர்களில் ஆடி நல்ல பெயரெடுத்துக் கொள்கிறார்களே தவிர ஒரு நெருக்கடியான, அழுத்தமான சூழ்நிலை ஏற்படும் போது டாப் பிளேயர்கள் பெவிலியனில் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு நிற்கிறார்கள் என்று அவர் கூறிய விமர்சனம் நூறு சதவீதம் சரியானது.
ஐபிஎல் கிரிக்கெட் கோலியின் சதத்துக்கானதல்ல. அவரது விரைவான பங்களிப்புக்கானது. கடந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே வீரர் ரஹானே கோலியை விட வேகமான ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்களைக் குவித்தார். ஐபிஎல் கிரிக்கெட் தனிப்பட்ட வீரர்களின் சதத்துக்கானதல்ல, சிறு சிறு பங்களிப்புகள் அதிரடி, சிக்சர்கள், பவுண்டரிகள் பற்றியது. அதற்குத் தக்கவாறுதான் கோலி ஆட வேண்டுமே தவிர தன் சதமே குறி என்று ஆடுவது அணியின் வெற்றிக்கு உதவவில்லை எனில் அது விரயமான சதம்தான்.