Last Updated:
RD என்பது எளிமையான, அதே நேரத்தில் உங்களுடைய சேமிப்புகளை உறுதி அளிக்கப்பட்ட ரிட்டன்களோடு பெறுவதற்கான ஒரு பாதுகாப்பான வழியாக அமைகிறது.
பணத்தை வழக்கமான முறையில் சேமிப்பது என்பது மிக முக்கியமான பொருளாதாரப் பழக்கங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அவசரத்திற்காகவோ, எதிர்கால இலக்குகளை அடைவதற்காகவோ அல்லது பொருளாதார ஒழுக்கத்தை அமைப்பதற்காகவோ எதற்காக வேண்டுமானாலும் இருக்கலாம், ஒரு குறிப்பிட்ட நிர்ணயிக்கப்பட்ட பணத்தை ஒவ்வொரு மாதமும் தனியாக எடுத்து வைப்பது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த இடத்தில் தான் ரெக்கரிங் டெபாசிட் (RD) நமக்கு உதவுகிறது.
ரெக்கரிங் டெபாசிட் என்பது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூலமாக ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு முதலீடு செய்வதற்கு அனுமதிக்கும் ஒரு சேமிப்புத் திட்டமாகும். இதற்கு பதிலாக வங்கி நீங்கள் டெபாசிட் செய்த தொகைக்கு ஒரு நிலையான வட்டி விகிதத்தை வழங்கும். அக்கவுண்ட் மெச்சூரிட்டி ஆனவுடன் நீங்கள் செய்த முதலீட்டுத் தொகை மற்றும் அதற்கான வட்டி சேர்த்து வழங்கப்படும்.
ரெக்கரிங் டெபாசிட்டின் முக்கியமான அம்சங்கள்:
- ஒவ்வொரு மாதமும் 500 அல்லது 1000 என்ற நிர்ணயிக்கப்பட்ட தொகையை உங்களுடைய விருப்பத்தின் அடிப்படையில் டெபாசிட் செய்து வருவீர்கள்.
- எவ்வளவு காலம் சேமிக்க வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம். ஒரு வங்கியைப் பொறுத்து வழக்கமாக இது 6 மாதங்கள் முதல் 10 ஆண்டுகள் வரை அமைகிறது.
- ரெக்கரிங் டெபாசிட்டுக்கான வட்டி விகிதமானது நீங்கள் அக்கவுண்ட்டைத் திறக்கும் சமயத்தில் நிர்ணயிக்கப்படுகிறது. மார்க்கெட் நிலைகளைப் பொறுத்து இந்த வட்டி விகிதம் மாறாது.
- பங்குச்சந்தையுடன் தொடர்பு இல்லாத காரணத்தால் RD என்பது பாதுகாப்பான மற்றும் ரிஸ்க் இல்லாத ஒரு சேமிப்புத் திட்டமாக அமைகிறது.
- ரெக்கரிங் டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் என்பது 3 மாதங்களுக்கு ஒருமுறை கூட்டு வட்டி முறையில் கணக்கிடப்படும். எனவே, நீங்கள் செய்த முதலீட்டுத் தொகைக்கு மட்டுமல்லாமல் உங்களுக்குக் கிடைத்த வட்டிக்கு மேலும் வட்டி வழங்கப்படும்.
- ஒரு சில வங்கிகள் RD பேலன்ஸை அடிப்படையாகக் கொண்டு உங்களுக்கு கடன் அல்லது ஓவர்டிராஃப்ட் வழங்குகின்றனர்.
- மெச்சூரிட்டிக்கு முன்பே RD அக்கவுண்ட்டை உங்களால் மூட முடியும். ஆனால், இதற்கு நீங்கள் அபராதத்தைச் செலுத்த வேண்டி இருக்கலாம் அல்லது உங்களுக்குக் கிடைக்க வேண்டிய வட்டி குறையலாம்.
ஒவ்வொரு மாதமும் உங்களால் எவ்வளவு தொகையை டெபாசிட் செய்ய முடியும் மற்றும் எவ்வளவு கால அவகாசத்திற்கு அதனைச் செய்ய முடியும் என்பதை முடிவு செய்யுங்கள். இந்தத் தொகை ஆட்டோமேட்டிக்காக ஒவ்வொரு மாதமும் உங்களுடைய சேமிப்புக் கணக்கிலிருந்து பிடித்தம் செய்யப்படும். ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட வட்டியில் டெபாசிட் செய்யப்பட்ட மொத்தத் தொகைக்கும் வட்டி விகிதத்தைப் பெற்று வருவீர்கள். மெச்சூரிட்டியின்போது நீங்கள் டெபாசிட் செய்த தொகை மற்றும் அதற்கான வட்டியைப் பெறுவீர்கள்.
RD அக்கவுண்ட்டை ஆன்லைனில் திறப்பது மிகவும் எளிமையான விஷயம். உங்களுடைய வங்கியின் நெட் பேங்கிங் அல்லது மொபைல் பேங்கிங் அப்ளிகேஷனில் லாகின் செய்யவும். அதில் ‘டெபாசிட்ஸ்’ பிரிவுக்குச் சென்று ‘ரெக்கரிங் டெபாசிட்’ என்பதைத் தேர்வு செய்யுங்கள். நீங்கள் முதலீடு செய்ய நினைக்கும் டெபாசிட் தொகை, கால அளவை என்டர் செய்துவிட்டு, உறுதி அளிக்கவும். இப்போது உங்களுடைய RD கணக்கு உடனடியாக ஆரம்பித்துவிடும். இணைக்கப்பட்டுள்ள சேமிப்புக் கணக்கிலிருந்து ஒவ்வொரு மாதமும் பணம் பிடித்தம் செய்யப்படும்.
June 28, 2025 9:08 PM IST