ஹைதராபாத்: ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சிஎஸ்கே அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தோல்வி அடைந்தது. 166 ரன்கள் இலக்கை துரத்திய ஹைதராபாத் அணி 11 பந்துகளை மீதம் வைத்து வெற்றிகண்டது. கருப்பு மண் ஆடுகளத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சிஎஸ்கே பவர்பிளேவில் 48 ரன்களே சேர்த்தது.
இதன் பின்னர் கடைசி 7 ஓவர்களில் 50 ரன்களையே எடுத்தது சிஎஸ்கே. வேகம் குறைந்த கட்டர்கள், பவுன்ஸர்கள் ஆகியவற்றை தொடர்ச்சியாக பயன்படுத்திய ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிஎஸ்கே பேட்ஸ்மேன்களை பெரிய அளவில் ரன் குவிக்க அனுமதிக்கவில்லை.
தோல்விக்குப் பின்னர் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறும்போது, “ஆட்டத்தின் பிற்பாதியில் ஹைதராபாத் அணியினர் சிறப்பாக பந்து வீசினார்கள். கடைசி 5 ஓவர்களை நாங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. கருப்புமண் ஆடுகளம் மந்தமாகவே இருக்கும் என நாங்கள் எதிர்பார்த்தோம். பந்து தொய்வடைந்த பின்னர் ஆடுகளம் மேலும் மந்தமானது. ஆடுகளத்தின் நிலைமையை ஹைதராபாத் அணியினர் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டனர். அதேவேளையில் பந்து வீச்சின் போது பவர்பிளேவில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை” என்றார்.