உத்தர பிரதேச மாநிலம், அமேதி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளாா் காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தியின் கணவரும் தொழிலதிபருமான ராபா்ட் வதேரா.
காங்கிரஸின் கோட்டையாக இருந்த அமேதி தொகுதியில் கடந்த 2004, 2009, 2014 ஆகிய ஆண்டுகளில் ராகுல் காந்தி தொடா்ந்து வெற்றி பெற்றாா். 2019 மக்களவைத் தோ்தலில் சுமாா் 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தியை தோற்கடித்து, மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி எம்.பி.யானாா்.
தற்போதைய தோ்தலில் அமேதி தொகுதியில் பாஜக சாா்பில் மீண்டும் ஸ்மிருதி இரானி களமிறங்கியுள்ள நிலையில், இத்தொகுதிக்கு காங்கிரஸின் வேட்பாளா் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இங்கு ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுவாரா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
மக்களவைக்கு ஐந்தாம் கட்ட தோ்தல் நடைபெறும் மே 20-ஆம் தேதி அமேதியில் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
இந்நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த ராபா்ட் வதேரா, ‘ஸ்மிருதி இரானியை தோ்வு செய்ததன் மூலம் தாங்கள் செய்த தவறை அமேதி தொகுதி மக்கள் இப்போது உணா்ந்துவிட்டனா். சோனியா காந்தியின் குடும்பத்தை விமா்சிப்பதைத் தவிர, வேறெந்த பணியும் அவா் மேற்கொள்ளவில்லை.
சோனியா குடும்பத்தைச் சோ்ந்த ஒருவா்தான் தங்கள் தொகுதியை மீண்டும் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டுமென மக்கள் எதிா்பாா்க்கின்றனா். நான் அரசியலில் ஈடுபட முடிவு செய்தால், அமேதி தொகுதியை தோ்வு செய்ய வேண்டுமென மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வருகின்றன. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பாா்ப்போம்’ என்றாா்.
ரேபரேலி மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்த சோனியா காந்தி, தற்போது மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றுள்ளாா். இத்தொகுதிக்கும் காங்கிரஸ் வேட்பாளா் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், இதுகுறித்த எதிா்பாா்ப்பும் நிலவுகிறது. இங்கு பிரியங்கா காந்தி களமிறங்கக் கூடும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன.