அரசு தரவுகளின்படி, கடந்த மாதம் அதாவது பிப்ரவரி 2024-ல் இந்தியாவின் மின் நுகர்வு 127.8 பில்லியன் யூனிட்ஸ்களாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் இதே மாதத்தில் நாட்டில் பயன்படுத்தப்பட்ட மின்நுகர்வை விட சுமார் 8 சதவீதம் அதிகமாகும்.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் (2023, பிப்ரவரி), நாட்டின் மின் நுகர்வு 118.29 பில்லியன் யூனிட்ஸ்களாக இருந்தது. நாட்டின் பல பகுதிகளில் குளிர் அலை நீடித்ததன் காரணமாக கடந்த மாதத்தில் நாட்டில் மின் நுகர்வு அதிகரித்து காணப்பட்டது. அது போல் அதிகப்பட்ச மின் தேவை (Peak power demand) அதாவது ஒரு நாளின் அதிகப்பட்ச விநியோகம் 2023 பிப்ரவரியில் இருந்த 209.76 ஜிகா வாட்டிலிருந்து நடப்பாண்டு 222 ஜிகா வாட்டாக அதிகரித்தது.
கடந்த 2022 பிப்ரவரியில் உச்ச மின் விநியோகம் 193.58 ஜிகா வாட்டாக இருந்தது. 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 28 நாட்கள் மட்டுமே. ஆனால் 2024 ஒரு லீப் ஆண்டாக இருப்பதால் பிப்ரவரியில் மொத்தம் 29 நாட்கள் இருந்தன. இதனால் கடந்த ஆண்டு பிப்ரவரியுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டு பிப்ரவரியில் நாட்டின் மின் நுகர்வு வளர்ச்சி விகிதம் சற்று அதிகமாக உள்ளது.
அதிகரித்து இருக்கும் மின் நுகர்வு குறித்து தகவல் தெரிவித்திருக்கும் அதிகாரிகள் கடந்த பிப்ரவரி மாதத்தில், குறிப்பாக வட இந்தியாவில் வெப்பம் குறைவாக இருந்ததால், மின் நுகர்விற்கான மற்றும் தேவையும் அதிகரித்து காணப்பட்டதாக தெரிவித்தனர். குறிப்பாக பிப்ரவரி இறுதி வரை குளிர் நீடித்ததன் விளைவாக ஹீட்டர்கள், ப்ளோயர்கள் மற்றும் Geyser-கள் போன்ற வெப்பமூட்டும் கருவிகளின் பயன்பாடு அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக நாட்டில் மின் தேவை அதிகரித்து, இதன் விளைவாக மின் நுகர்வும் அதிகரித்தது என்கிறார்கள் நிபுணர்கள்.
இதனிடையே கடந்த ஆண்டு கோடை காலத்தில் நாட்டின் மின்சாரத் தேவை 229 ஜிகாவாட்டை எட்டும் என்று மின் அமைச்சகம் மதிப்பிட்டிருந்தது, ஆனால் பருவமழை பொய்த்ததால் ஏப்ரல்-ஜூலை மாதங்களில் மின் தேவை எதிர்பார்த்த அளவை எட்டவில்லை. எனினும் கடந்த ஜூன் மாதத்தில் பீக் சப்ளை 224.1 ஜிகாவாட் என்ற புதிய உச்சத்தைத் தொட்டது. இதனை தொடர்ந்து 2023-ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் உச்ச மின் தேவை 238.82 ஜிகாவாட்டை தொட்டது. இதனை தொடர்ந்து செப்டம்பரில் 243.27 ஜிகாவாட்டாகவும், அக்டோபரில் 222.16 ஜிகாவாட்டாகவும், நவம்பரில் 204.77 ஜிகாவாட்டாகவும், 2023 டிசம்பரில் 213.79 ஜிகாவாட்டாகவும் மற்றும் ஜனவரி 2024-ல் இது 222.73 ஜிகாவாட்டாகவும் இருந்தது.
Also Read : இந்தியாவில் அதிக சம்பளம் தரும் மாநிலங்கள் எது தெரியுமா? தமிழ்நாடு எந்த இடம்?
கடந்த ஆண்டு மார்ச், ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் பரவலாக மழை பெய்ததால் மின் நுகர்வு பாதிக்கப்பட்டதாக தொழில் வல்லுநர்கள் தெரிவித்தனர். எனினும் கடந்த ஆண்டில் ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மின் நுகர்வு அதிகரிக்க ஈரப்பத வானிலை மற்றும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தொழில்துறை நடவடிக்கை அதிகரித்தது உள்ளிட்டவை முக்கிய காரணமாக இருந்ததாகவும் தெரிவித்து உள்ளனர். பொருளாதார நடவடிக்கைகளில் முன்னேற்றம் மற்றும் மார்ச் மாதத்தில் கோடைகாலம் துவங்குவதால் நாட்டின் மின் நுகர்வில் நிலையான வளர்ச்சியை எதிர்பார்ப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…