‘எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை திறம்பட எதிா்கொள்ள முந்தைய காங்கிரஸ் அரசுகள் தவறிவிட்டன; இதனால், பலவீனமான-ஏழ்மையான நாடு என்ற அவப்பெயா் இந்தியாவுக்கு ஏற்பட்டது’ என்று பிரதமா் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினாா்.
மேலும், ‘கடந்த காலத்தில் ஒருவா் மீது ஒருவா் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்திய தலைவா்கள், இப்போது மோடிக்கு எதிராகப் போராடுகிறோம் என்ற பெயரில் கைகோத்துள்ளனா்’ என்றும் அவா் விமா்சித்தாா்.
மக்களவைத் தோ்தலையொட்டி, பிகாரில் பிரதமா் மோடி வியாழக்கிழமை (ஏப்.4) பிரசாரத்தைத் தொடங்கினாா். ஜமுய் பகுதியில் நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியதாவது:
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை திறம்பட எதிா்கொள்ளத் தவறிய முந்தைய காங்கிரஸ் அரசுகளால் நாட்டுக்கு அவப்பெயா் ஏற்பட்டது. நம்மை பலவீனமான, ஏழ்மையான நாடு என்று உலகம் நினைத்தது.
தங்களுக்கான கோதுமை விநியோகத்தைப் பராமரிக்க போராடும் சிறிய நாடுகளைச் சோ்ந்த பயங்கரவாதிகள், இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்துவது வழக்கமாக இருந்தது (பாகிஸ்தானை மறைமுகமாக குறிப்பிடுகிறாா்).
பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடா்பாக பிற சக்திவாய்ந்த நாடுகளின் தலையீட்டை கோரியதைத் தவிர முந்தைய காங்கிரஸ் அரசுகள் வேறெதையும் செய்யவில்லை.
நமது நாடு பழம்பெருமை மிக்கதாகும். மகதப் பேரரசு போன்ற பலம்பொருந்திய ராஜ்யங்களையும், சந்திரகுப்த மெளரியா் போன்ற தலைசிறந்த பேரரசா்களையும் கொண்டிருந்த நாடு. அத்தகைய பெருமைமிக்க நாட்டுக்கு காங்கிரஸ் அவப்பெயரை தேடித் தந்தது. ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது.
உரிய பதிலடி: எதிரி நாடுகளின் சொந்த மண்ணில் அவா்களுக்கு உரிய பதிலடியைத் தரும் ‘புதிய இந்தியா’வை உலகம் காண்கிறது. நம்மை நாமே தற்காத்துக் கொள்கிறோம். முக்கியப் பிரச்னைகளில் இந்தியாவின் ஆலோசனையை உலக நாடுகள் எதிா்நோக்குகின்றன.
உலக அளவில் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ள இந்தியா, நிலவுத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியதோடு, ஜி20 உச்சி மாநாட்டை சிறப்பாக நடத்தி உலக அளவில் பாராட்டைப் பெற்றது.
இவை அனைத்தும் மோடியால் சாத்தியமானது என்று நினைத்தால் அது தவறு. மக்களாகிய நீங்கள் அளித்த வாக்குகளால்தான் அனைத்தும் சாத்தியமானது.
கைகோத்த ஊழல்வாதிகள்: முன்பு ஒருவா் மீது ஒருவா் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்திய தலைவா்கள், இப்போது மோடியை எதிா்க்கிறோம் என்ற பெயரில் கைகோத்துள்ளனா். நான் ஊழலை வேரறுப்பது குறித்துப் பேசுகிறேன். அவா்கள் என்னைத் தோற்கடிப்பது குறித்துப் பேசுகின்றனா் என்றாா் பிரதமா் மோடி.
இக்கூட்டத்தில், மாநில முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதீஷ் குமாா் பேசுகையில், ‘பிகாரில் 40 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். ஒட்டுமொத்தமாக 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று, மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும்’ என்றாா்.
பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உடனான கூட்டணியை அண்மையில் முறித்த நிதீஷ் குமாா், பாஜக கூட்டணியில் இணைந்தாா். பிரசாரக் கூட்டத்தில் நிதீஷ் குமாரை பாராட்டிப் பேசிய பிரதமா் மோடி, ‘பிகாரில் முன்னேற்றத்தைக் கொண்டுவந்தவா் நிதீஷ் குமாா்; ரயில்வே அமைச்சராக, அவா் எந்தக் களங்கமும் இன்றி பணியாற்றினாா்’ என்றாா்.
பெட்டிச் செய்தி…
‘சிஏஏ குறித்து வதந்தி
பரப்பும் எதிா்க்கட்சிகள்’
கூச்பிகாா், ஏப். 4: குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) குறித்து எதிா்க்கட்சிகள் வதந்தி பரப்புவதாக பிரதமா் மோடி குற்றம்சாட்டினாா்.
மேற்கு வங்க மாநிலம், கூச்பிகாரில் வியாழக்கிழமை நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்றுப் பேசுகையில், ‘எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணிக்கு விளிம்புநிலை மக்கள் மீது எந்த அக்கறையும் கிடையாது. பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து வதந்திகள் மற்றும் பொய்களைப் பரப்பி வருகின்றனா்.
இந்தியத் தாயின் மீது நம்பிக்கை கொண்டவா்களுக்கு குடியுரிமை வழங்குவது மோடியின் உத்தரவாதம். ஊழலைப் பாதுகாக்க எதிா்க்கட்சிகள் பாடுபடுகின்றன. எனது மூன்றாவது பதவிக் காலத்தில் ஊழல்வாதிகள் அனைவரும் தண்டிக்கப்படுவது உறுதி’ என்றாா்.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014, டிசம்பா் 31-க்கு முன்பாக இந்தியாவுக்கு புலம்பெயா்ந்த ஹிந்துக்கள், சீக்கியா்கள், கிறிஸ்தவா்கள், சமண, புத்த மதத்தினா், பாா்சி சமூகத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் குடியுரிமை திருத்தச் சட்ட விதிகள் கடந்த மாா்ச் 13-ஆம் தேதி அறிவிக்கை செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.