பணி ரீதியாக வெளிநாடுகளுக்குச் செல்லும் நேபாள குடிமக்கள், நேபாளத்தின் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை அல்லது புதுடெல்லியில் உள்ள தூதரகத்திடமிருந்து தொழிலாளர் அனுமதி மற்றும் ஆட்சேபனையின்மைச் சான்றிதழ்களைப் (NOCs) பெற வேண்டும் என்று இந்தியாவில் உள்ள நேபாள தூதரகம் வலியுறுத்தி இருக்கிறது. மேலும், என்ஓசி பெறாமல் பயணம் மேற்கொள்பவர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட ஒரு அறிவிப்பில், வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையிலிருந்து தொழிலாளர் அனுமதி மற்றும் ஆட்சேபனையின்மைச் சான்றிதழ்களைப் (NOCs) பெறாமல், இந்திய விமான நிலையங்கள் வழியாக வளைகுடா நாடுகளுக்குச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இந்தியாவில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் நேபாள அரசாங்கத்தின் கவனத்திற்கு வந்துள்ளதாகத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இது சம்பந்தமாக, பல நேபாள குடிமக்களிடம் விசாரணை, தடுப்புக் காவல் மற்றும் விமானப் பயணம் மேற்கொள்ளத் தடை போன்ற சிக்கல்களை மேற்கோள்காட்டி, போலி ஆவணங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு இந்தியாவில் உள்ள நேபாள தூதரகம் அந்நாட்டுக் குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஆண்டு, நேபாள தூதரகம் இந்திய விமான நிலையங்களைப் பயன்படுத்தும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான என்ஓசி-க்கான தேவைகளைத் தளர்த்தி இருந்தது. வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையால் வழங்கப்பட்ட, செல்லுபடியாகும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அனுமதியை வைத்திருக்கும் நேபாள குடிமக்கள் இந்திய விமான நிலையங்கள் வழியாகப் பயணிக்கும்போது என்ஓசி பெறத் தேவையில்லை என்றும் கூறியிருந்தது.
இது குறித்து தூதரகம் கடந்த நவம்பர் மாதம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், சவுதி அரேபியா, கத்தார், குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், பஹ்ரைன், ஈராக், லிபியா மற்றும் லெபனான் போன்ற நாடுகளுக்கு இந்திய விமான நிலையங்கள் வழியாகச் செல்லும் பிற பயணிகள் கட்டாயம் என்ஓசி பெற வேண்டும் என்பதையும் வலியுறுத்தியிருந்தது.
கூடுதலாக, ரஷ்ய அரசாங்கத்திடமிருந்து உதவித்தொகை பெறுபவர்கள் மற்றும் பிசினஸ் விசா வைத்திருப்பவர்கள் தவிர, ரஷ்யாவிற்குப் பயணம் மேற்கொள்பவர்கள் நேபாள தூதரகம் அல்லது தூதரகச் சேவைகள் துறையிடமிருந்து என்ஓசி-ஐ பெற வேண்டும்.
நேபாளத்தின் முன்னணி நாளிதழான தி காத்மாண்டு போஸ்ட்டில் வெளியான ஒரு அறிக்கையின்படி, நேபாளத்தில் அதிகரித்துவரும் பொருளாதார நெருக்கடி மற்றும் வேலையின்மை காரணமாக, வேலை தேடி அங்குள்ள மக்கள் ஏராளமானோர் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது. அதன் ஒரு பகுதியாகக் கடந்த ஆண்டில் மட்டும், 3,00,000க்கும் மேற்பட்ட நேபாள மக்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் வேலை விசாவில் வளைகுடா நாடுகள் மற்றும் மலேசியாவிற்குச் சென்றுள்ளனர் என்று அதிகாரப்பூர்வப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா வழியாக பயணம் செய்யும் தனது நாட்டு குடிமக்களுக்கு நேபாள அரசின் எச்சரிக்கை…! என்ன தெரியுமா…?