Last Updated:
நாட்டில் புழக்கத்தில் உள்ள கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்திருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
நாட்டில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் புழக்கத்தில் உள்ள கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்திருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கடந்த 2024-2025-ஆம் நிதி ஆண்டுக்கான ஆண்டறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத வகையில், 500 ரூபாய் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை பெரும் அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 2023-24 நிதியாண்டில் 85 ஆயிரத்து 711 கள்ள நோட்டுகள் கண்டறியப்பட்ட நிலையில், 2024-25 நிதியாண்டில் இது ஒரு லட்சத்து 18 ஆயிரமாக அதிகரித்துள்ளது. கள்ள நோட்டுக்களின் எண்ணிக்கை 37.3 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், இவற்றின் மதிப்பு 5 கோடியே 88 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரிசர்வ் வங்கியின் நிகர லாபம் 27 சதவீதம் உயர்ந்து இரண்டு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாயாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட்டி விகிதம், டாலர் விற்பனை காரணமாக இந்த லாபம் கிடைத்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. நாட்டில் கையிருப்பு தங்கத்தின் மதிப்பு 57 சதவீதம் உயர்ந்து 4 லட்சத்து 32 ஆயிரம் கோடி ரூபாயாக இருப்பதாகவும், தற்போது 879 மெட்ரிக் டன் தங்கம் கையிருப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மோசடிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட குறைந்திருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இருப்பினும், வங்கி மோசடியின் மதிப்பு முந்தைய நிதி ஆண்டு 12 ஆயிரத்து 230 கோடி ரூபாயாக இருந்த நிலையில், கடந்த நிதியாண்டில் 36 ஆயிரத்து 14 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
500 ரூபாய் கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகரிப்பு… ரிசர்வ் வங்கி விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை!


