Last Updated:
பாகிஸ்தானுக்குப் பதிலடி கொடுப்பதற்காக நம் இந்திய ராணுவ வீரர்கள் இந்தக் கிராமத்தின் திறந்தவெளிகளில் வரிசையாக அணிவகுத்து நின்றனர். இந்தச் சூழலில் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவனான ஷ்ரவன் சிங் (Shravan Singh) சீருடையின்றி, ஆயுதங்களின்றித் தைரியத்துடன் நம் ராணுவ வீரர்களுக்கு உறுதுணையாக நின்றான்.
இந்தியா – பாகிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள பஞ்சாபின் தாரா வாலி (Tara Wali) கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கிராமவாசிகள் தங்கள் கண்களுக்கு முன்பாகத்தான் இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைப் பார்த்தனர்.
உலகுக்கு நம் வலிமையைப் பறைசாற்றிய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் ஒரு பகுதி Tara Wali கிராமத்தினரின் கண்களுக்கு முன்பாக நிகழ்த்தப்பட்டது. பாகிஸ்தானுக்குப் பதிலடி கொடுப்பதற்காக நம் இந்திய ராணுவ வீரர்கள் இந்தக் கிராமத்தின் திறந்தவெளிகளில் வரிசையாக அணிவகுத்து நின்றனர். இந்தச் சூழலில் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவனான ஷ்ரவன் சிங் (Shravan Singh) சீருடையின்றி, ஆயுதங்களின்றித் தைரியத்துடன் நம் ராணுவ வீரர்களுக்கு உறுதுணையாக நின்றான்.
தான் வளர்ந்ததும் இந்திய இராணுவ வீரனாக வேண்டும் என்று கனவு காணும் சிறுவன் தான் ஷ்ரவன் சிங். ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தனது கிராமத்தில் போர் போன்ற சூழ்நிலையைக் கண்ட பிறகு எந்த வகையிலாவது நம் ராணுவ வீரர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று உறுதி பூண்டுள்ளான். இதன் ஒரு கட்டமாக ராணுவ நடவடிக்கையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காமல், தனது குடும்பத்தின் விவசாய நிலத்தில் முகாமிட்டிருந்த ராணுவ வீரர்களுக்குத் தண்ணீர், பால், லஸ்ஸி மற்றும் ஐஸ் என மாறி மாறித் தனது பிஞ்சு கைகளால் ஏந்தி வந்து கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறான்.
உள்ளூர் விவசாயி சோனா சிங் என்பவரது மகனான ஷ்ரவன் சிங். கடும் பதற்றத்துக்கு மத்தியில் கிராம மக்கள் அச்சத்தில் இருந்தபோது எதைப்பற்றியும் யோசிக்காமல் சிறுவன் ஷ்ரவன் சிங் தினமும் ராணுவ வீரர்களுக்குத் தன்னால் முடிந்த சேவைகளைத் தொடர்ந்து செய்து அவர்கள் ஒருபோதும் தனியாக இல்லை என்பதை நினைவூட்டினான். போர் பதற்றம் நிலவியபோதும், களத்தில் நின்ற நம் வீரர்களுக்கு உதவி அச்சத்தைத் தூக்கி எறிந்து சேவையாற்றிய சிறுவன் இது குறித்துப் பேசுகையில், “நான் பயப்படவில்லை. நான் பெரியவனானதும் ஒரு ராணுவ சிப்பாயாக வேண்டும் என்று விரும்புகிறேன்.
வீரர்களுக்குத் தண்ணீர், லஸ்ஸி மற்றும் ஐஸ் கொண்டு கொடுத்தேன். அவர்கள் என்னை மிகவும் நேசித்தார்கள்” என்று கூறி உள்ளான். சிறுவன் தைரியமான முயற்சிகள் கவனிக்கப்படாமல் போகவில்லை. இந்தச் சிறுவனின் எளிமையான ஆனால் ஆழமான சேவையால் ஈர்க்கப்பட்ட இந்திய ராணுவம், சிறுவனை நேரில் அழைத்துக் கௌரவித்தது.
7வது காலாட்படைப் பிரிவின் ஜெனரல் ஆபீஸர் கமாண்டிங் மேஜர் ஜெனரல் ரஞ்சித் சிங் மன்ரால், சிறுவன் ஷ்ரவன் சிங்கிற்குப் பாராட்டுத் தெரிவித்தார். இது தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறிய விழாவில் சிறுவனுக்கு ஒரு நினைவுப் பரிசு, ஒரு சிறப்பு உணவு மற்றும் அவருக்குப் பிடித்தமான ஐஸ்கிரீம் பரிசாக வழங்கப்பட்டது. பாராட்டு விழாவைத் தொடர்ந்து பேசிய சிறுவன் ஷ்ரவன் சிங், “ராணுவத்தினர் எனக்கு உணவும், ஐஸ்கிரீமும் கொடுத்தார்கள். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் ஒரு சிப்பாயாகி நாட்டிற்குச் சேவை செய்ய விரும்புகிறேன்” என உற்சாகமாகத் தெரிவித்தான்.
சிறுவனின் தந்தையான சோனா சிங் பேசுகையில், “எனது மகன் மற்றும் இந்திய ராணுவத்துடனான பிணைப்பைப் பார்ப்பதற்கே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எங்கள் வயல்களில் ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்ட முதல் நாளிலிருந்தே, ஷ்ரவன் அவர்களுக்கு உதவத் தொடங்கினான். பால், தண்ணீர், லஸ்ஸி மற்றும் ஐஸ் கொடுத்தான். நாங்கள் அவனுக்கு ஆதரவாக நின்றோம், அவன் வீரர்களுக்கு ஆதரவாக நின்றான்” என்று சோனா சிங் கூறினார். களத்தில் நின்ற ராணுவ வீரர்களுக்கு உதவி செய்ததன் மூலம் சிறுவன் ஷ்ரவன் சிங்கின் பெயர் நாடு முழுவதும் பிரபலமாகி உள்ளது.
May 29, 2025 10:26 PM IST


