Last Updated:
கர்நாடகா மாநிலத்தில் உள்ள பாகல்கோட் மாவட்டத்தில் கிரிக்கெட் பந்து தொடர்பான வாக்குவாதத்தில் ஆசிரியர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிரிக்கெட் பந்து தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவரை, இளைஞர் கூர்மையான ஆயுதம் கொண்டு சரமாரியாகத் தாக்கியதில், அந்த ஆசிரியர் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் ஒருநாள் பிற்பகல் நேரத்தில் சுமார் 2.30 மணியளவில் பவன் ஜாதவ் என்ற இளைஞரால் தாக்கப்பட்ட 36 வயதான ராமு பூஜாரி என்ற ஆசிரியர், தற்போது முகம், தோள்பட்டை மற்றும் கழுத்தில் ஏற்பட்ட கடுமையான காயங்களுக்குத் தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் உள்ள பாகல்கோட் மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் உள்ள சவலகி என்ற கிராமத்தில் நிகழ்ந்துள்ளது.
கொடூர தாக்குதல் சம்பவம் நடந்த 2 நாட்களுக்கு முன்னர், ஆசிரியர் பூஜாரியின் வீட்டில் கிரிக்கெட் பந்து விழுந்ததால் ஏற்பட்ட மோதல் முற்றியதால் இந்தக் குற்றச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து தகவல் தெரிவித்துள்ள உள்ளூர்வாசிகள், ஆசிரியர் ராமு பூஜாரி வீட்டிற்குள் கிரிக்கெட் பந்து பலமுறை திரும்பத் திரும்ப வந்து விழுந்ததால் அவர் கோபமடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். இதனால் கிரிக்கெட் பந்தைத் தேடி தன் வீட்டிற்கு வந்த பவன் ஜாதவிடம் கடும் அதிருப்தியைக் கோபத்துடன் ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளார். முதலில் பந்து இங்கே வரவில்லை என்று கூறியுள்ளார்.
பின்னர், “உங்கள் வீட்டிலிருக்கும் யாரையாவது அழைத்து அந்தப் பந்தைத் திருப்பித் தருகிறேன்” என்று கூறியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த பவன் “நீங்கள் பந்தைத் திருப்பித் தரவில்லை என்றால் அப்புறம் விளைவுகள் வேறு மாதிரியாக இருக்கும், நீங்கள் ரத்தம் சிந்த வேண்டியிருக்கும்” என்று கோபத்தில் மிரட்டியுள்ளார்.
கிரிக்கெட் பந்தை ஆசிரியர் தர மறுத்ததால் கோபத்தில் இருந்த பவன் ஜாதவ், கடந்த மே 13 அன்று பூஜாரி ஆரம்பப் பள்ளி ஆசிரியராக வேலை செய்து கொண்டிருந்த BLDI நிறுவன அலுவலகத்திற்குள் மன்னிப்பு கேட்பதுபோல் நுழைந்தார். ஆனால், அங்கு சென்றும் பூஜாரியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோசமான வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் தனது சட்டைப் பையில் மறைத்து வைத்திருந்த மெட்டல் ஃபிங்கர் ரிங்-ஆல் (உடலைக் குத்தித் தாக்கப் பயன்படும் கூர்மையான ஆயுதம்) அவரைத் தாக்கினார். கையில் மாட்டிக் கொள்ளும் அந்த ஆயுதத்தைக் கொண்டு ஆசிரியர் ஜாதவ், பூஜாரியின் வலது கண்ணுக்கு அருகிலும், நெற்றியிலும் பலமுறை தாக்கிவிட்டுத் தப்பி ஓடியுள்ளார் பவன். தாக்குதலால் நிலைகுலைந்த ஆசிரியருக்குக் கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டது. ஆசிரியரின் தோள்பட்டை மற்றும் கழுத்திலும் காயங்கள் ஏற்பட்டன.
கிரிக்கெட் பந்து தொடர்பான தகராறில் ஆசிரியரைத் தாக்கிய பவன் ஜாதவை, சவலகி போலீசார் கைது செய்து கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இந்தத் தாக்குதல் சம்பவம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.


